ஒளவைக்கு அழகிய விழா எடுத்த ஓகூஸ் தமிழர் ஒன்றியம்

ஒளவையார் எழுதிய அத்திசூடியை ஆங்கிலம், டேனிஸ் மொழிகளில் வெளியிட்டு கூடவே ஒளவையின் வரிகளையும் தமிழில் இணைத்து ஞானத்தாய் ஒளவையார் எழுதிய ஆத்திசூடி என்ற மும்மொழி நூல் வெளியீட்டுவிழா டென்மார்க் ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தால் கடந்த 15.06.2019 சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவர்களுடைய அரங்கிலே நிகழ்வு நடைபெற்றது. விழாவில் இந்தியா புதுச்சேரியில் இருந்து முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அவரோடு டென்மார்க் வாழ் கவிஞர்கள், கலைஞர்கள், நடன ஆசிரியைகள் என்று பெருந்தெகையான படைப்பாளிகள் கூட்டமே பங்கேற்று விழாவை அசத்தியது.

பிள்ளைகள் ஆத்திசூடியை பகுதி பகுதியாக சொல்லி விளக்கமும் வழங்கியது விழாவிற்கு ஒரு புதுமை கொடுத்தது. விழாவிற்கு டேனிஸ் மக்களும் வருகை தந்து சிறப்பளித்தது இன்னொரு விடயமாக இருந்தது.

மேலும் நூலின் தொகுப்பாளராக பணியாற்றிய கஜேந்திரன் நாகலிங்கம், டேனிஸ் மொழியில் வழங்கிய Marianne Steen Isak, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த காராளசிங்கம் சில்வெஸ்டர் ஜெகான் ஆகியோரின் முயற்சி மிகவும் கடுமையானது என்பதை நூல் காட்டியது. அவர்களுடைய உழைப்பின் உண்மையும் மேன்மையும் நூலில் காண முடிந்தது.

நூல் வெளியீட்டுக்காக அவர்கள் அமைத்த அரங்கம் தமிழுக்கு பெருமை தந்தது. ” இப்படியொரு சிறந்த நேர்த்தியான பணி, அதுவும் இலக்கியத்திற்கான பணி டென்டமார்க்கில் நடைபெற்று வெகு காலமாகிவிட்டது” என்று பலரும் கூறியதை காதால் கேட்க முடிந்தது. பேச்சாளர்களும் அதை சுட்டிக்காட்டினார்கள்.

விழா மிகவும் பெரியது, இரண்டு நாட்கள் தாண்டினாலும் நடத்தி முடிக்க இயலாத பாரிய நிகழ்ச்சி நிரலை உருவாக்கி அதை குறித்த காலத்தில் முடித்தது, மற்றவர் குறை கூற முடியாதளவுக்கு இயன்றளவு போராடியது யாவும் ஏற்பாட்டாளர் முகங்களில் தெரிந்தது.

எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக செய்ய தாம் உறுதி பூண்டுள்ளதாக ஓகூஸ் தமிழர் ஒன்றிய இளையோர் உறுதி மொழி வழங்கிய நிகழ்வும் இடம் பெற்றது. டென்மார்க் மாலதி கலைக்கூடத்தில் கற்று உயர் கல்வியில் தமிழில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சிறந்த பரிசில் வழங்கி, அந்த அரிய பணியை சிறப்போடு செய்த ஆசிரிய பெருமக்களையும் வாழ்த்தினார்கள். மாலதி தமிழ் கலைக்கூடத்தின் பணி பலராலும் பாராட்டப்பட்டது.

அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் கௌரவ விருது வழங்கப்பட்டது, அன்னாரின் பாரியார் அதை கண்ணீர் மல்க பெற்றுக்கொண்டார். பொன்னண்ணா இறக்கவில்லை அவர் வழங்கிய வாழ்த்து மடல்களின் கவிதைகளாக நம்மிடையே வாழ்கிறார் என்று அவை போற்றியது.

சுவாமி விபுலானந்தர் இலங்கை கிழக்கு மாகாணம் காரைதீவில் பிறந்து ஆற்றிய தமிழ் பணிகளை முனைவர் மு. இளங்கோவன் ஆவணப்படமாக்கி தந்தார். இலங்கையில் உள்ளோர் செய்ய வேண்டிய பணியை தமிழகத்தில் ஒருவர் செய்தது ஆச்சரியம் தந்தது, தயாரிப்பு தரமுள்ளதாக இருந்தது.

ஆத்திசூடியை டேனிஸ், ஆங்கில மொழிகளிலும் தந்திருப்பதால் இன்றைய தமிழ் இளையோருக்கு மிகச்சிறந்த கை நூலாக இது அமையும் என்பதில் இரு கருத்திற்கு இடமில்லை.

டென்மார்க் மட்டுமல்ல புலம் பெயர்ந்த தமிழர் வாழும் நாடுகளுக்கெல்லாம் பயன்தரும் பெரு முயற்சியாக இருக்கிறது. ஆகவே மற்றய நாடுகளுக்கும் இப்படைப்பை கொண்டு செல்லுதல் வேண்டும்.

இன்று ரிவிற்றரில் எழுதுவது போல அன்றே எழுதி வழிகாட்டியவர் நம் ஒளவை என்பதை இன்றுள்ள இளைய தலைமுறை கண்டு, இன்றைய சமூக வலைத்தளங்கள், குறுஞ்செய்தி கண்டு பிடிப்பாளர்களுக்கெல்லாம் வழி காட்டிய படைப்பு தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்தவர் ஒளவை என்ற முடிவுக்கு வரவும் நூல் வழி காட்டுகிறது.

தமிழின் பெருமையை அறியாது மேலை நாட்டு மொழிகளுடன் ஒப்பிட்டால் தமிழ் தாழ்ந்தது என்ற அறியாமையை முறியடிக்கும் அஸ்திரமாகவும் மிளிர்கிறது நூல்.

எங்கெல்லாம் சிறப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று இதய தூரிகாவின் அட்டை படம் வரை அனைத்து இடங்களையும் ஒன்றிணைத்த அமைப்பாளர் பாராட்டுக்குரியோர்.

அதுதவிர நடனங்கள் தரமாக இருந்தன, சங்கீதப்பாடல்கள் அவைக்கு மேலும் அழகை தந்தன. உரைகள் அளவோடு வகுக்கப்பட்டிருந்தன, முனைவர் மு. இளங்கோவன் பல்வேறு கருத்துக்களை வழங்கினார். அவை தனியாக எழுதப்பட வேண்டியவை.

பி.ப. 2.00 மணிக்கு தொடங்கி 11.00 மணிவரை நடந்தது நிகழ்ச்சி. பங்கேற்றோர் பெயர் பட்டியல் ஏழு பக்கங்களுக்கு உள்ளது. அதனால் பெயர்கள் இடம் பெறவில்லை. அதே வேளை புத்தகத்தை மக்களே மேடைக்கு வந்து வேண்டியது ஒளவைக்கு பெருமை தந்தது.

இந்த செய்தி மேலும் விரிவாக எழுதப்பட வேண்டியதாகும்.

புகைப்படங்கள் இடம் பெறவில்லை காணொளி வருகிறது..

அலைகள் 29.06.2019

Related posts