சினிமாவில் முனைவர் பட்டம் பெற்ற டென்மார்க் தமிழ் இளைஞர்.

டென்மார்க்கில் வாழ்ந்து வரும் இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இளைஞர் வஸந்த் செல்லத்துரை சினிமா துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் (PhD) வாங்கியுள்ளார்.

சினிமாத்துறை, கதை கூறல், நவீன ஊடகங்களை பாவிக்கக்கூடிய விதத்தில் எதிர்கால சினிமாவுக்கான அடித்தளத்தை உருவாக்குவது எப்படியென்பது குறித்த இவருடைய ஆய்வு நூலை டென்மார்க் ஒல்போ பல்கலைக்கழக நிபுணர்கள் குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

இந்த ஆய்வு செய்யப்பட்ட மொழி ஆங்கிலம், டெனமார்க் ஒல்போ பல்கலைக்கழகம் உட்பட அவுஸ்திரே
லியா மெல்பேர்ண் பல்கலைக்கிகம் வரை பல்வேறு பல்கலைக்கழகங்களை இணைத்து மேற்கொள்ளப்பட்ட பரந்துபட்ட முயற்சியாகும்.

கடந்த 11ம் திகதி யூன் மாதம் டென்மார்க் ஒல்போ பல்கலைக்கழக ஆய்வரங்கில் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்து வஸந்த் செல்லத்துரை வாதாடினார், இது சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்றது. அவுஸ்திரேலியா மெல்பேண் பல்கலை கழக சினிமா, டிஜிற்றல் துறை பேராசிரியர், டென்மார்க் கோப்பன்கேகன் பல்கலைக்கழக காட்டுன் திரைப்பட பேராசிரியர், மற்றும் நவீன ஊடகத்துறை பேராசிரியர்கள் குழு இந்த நிகழ்வில் பங்கேற்று தமது கேள்விகளை முன் வைத்தார்கள்.

சுமார் 100 கேள்விகள் வரை கேட்கப்பட்டன, அனைத்திற்கும் சரியான பதில் தரப்பட்டதாக தொரிவித்த பேராசிரியர்கள் ஏகமனமாக முனைவர் பட்டத்தை வழங்கினார்கள். இந்த ஆய்விற்கான நிதியை டென்மார்க்கின் வடகடல் அக்குவாரியம் கண்காட்சி நிறுவனம், ஒல்போ பல்கலைக்கழக மானியக்குழு என்பன இணைந்து வழங்கியிருந்தன.

இந்தக் கற்கையை மேற்கொண்டது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த வஸந்த் செல்லத்துரை தான் நடித்து இசையமைத்த மூன்று திரைப்பட அனுபவங்கள்தான் இத்தகைய முயற்சிக்குக் காரணம் என்றார்.

பூக்கள், இளம்புயல், உயிர்வரை இனித்தாய் ஆகிய மூன்று திரைப்படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்து, இசையமைத்து, படத்தொகுப்குபு உட்பட்ட அனைத்து பணிகளையும் செய்து பெற்ற அனுபவமே மேலும் பல விடயங்களை அறிய வேண்டிய தேவையை உருவாக்கியது.

தமிழகத்தின் பல ஆற்றல் மிக்க கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம் இந்தப் புதிய தேடலுக்கு வழிகாட்டியது. சினிமா ஏற்கனவே உள்ள கடல் போன்றது நாம் அதில் நீந்திவிட்டு செல்லும் நீச்சல்காரரே என்று பிரபல கமேராமேன் கிச்சாஸ் அவர்கள் கூறியதையும் நினைவுபடுத்தினார். “நாம் எவ்வளவுதான் கற்றாலும் கற்றது கைம் மண்ணளவுதான் ” என்று தன்னடக்கத்துடன் கூறியிருந்தார்.

இலங்கையின் சினிமாவின் மேம்பாட்டிற்கும், தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் உலக சினிமா, நவீன ஊடகத்துறை வளர்ச்சி போன்றவற்றுடன் இணைந்த செயற்பாட்டுகளுக்கும் இப்போதிருக்கும் செயற்பாட்டுத்தளம் போதியதல்ல. நாம் புதிய காலடிகளை பதிக்க வேண்டும். தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல உலக சினிமாவுக்கே அது தேவை என்ற தனது புதிய கண்டு பிடிப்பு அடுத்த கட்ட பாரிய சினிமா வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும் என்றும் கூறினார்.

சர்வதே நிபுணத்துவமிக்க நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். அதற்கான வழிகாட்டியாக இந்த ஆய்வு அமைகிறது. உலகின் பல நாடுகளின் பல்கலைக்கழகங்கள் சென்று அங்குள்ள அறிஞர்களுடன் பணியாற்றி பெற்ற அனுபவங்களின் பின் பலத்த போராட்டங்களிலும், பல்லாண்டு கால கடின உழைப்பிலும் இந்த இலக்கைத் தொட முடிந்தது என்று கூறிய அவர் இத்துறையில் மேலும் நடக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

சினிமா துறையில் படித்து முனைவர் பட்டம் பெற்ற பின்னர் ஒருவர் சினிமா துறைக்கு வருவது ஒரு வழி ஆனால் சினிமாவில் நடித்து, அனுபவம் பெற்று அதன் பின்னர் முனைவர் பட்டம் பெறுவது புதிய முயற்சி. சர்வதேச முதன்மை மிகு பல்கலைக்கழகங்களில் தமிழ் சினிமா அனுபவங்களோடு வந்து முனைவர் பட்டம் பெற்ற முதல் தமிழ் சினிமா கலைஞர் இவர் என்று வாழ்த்தினார்கள், அங்கு வந்த புலம் பெயர் தமிழர் பலர்.

இதற்கு முன்னதாக சுமார் 1600 ஆங்கிலப்படங்களை ஆய்வு செய்து அவற்றில் வெற்றி பெற்ற திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, வெற்றி பெற்ற திரைப்படங்களில் எல்லாம் காணப்பட்ட பொதுவான அம்சங்கள் என்று இவர் எழுதிய ஆங்கில நூல் பல்கலைக்கழக அறிஞர் குழுவினரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்களில் வெற்றிக்கான அம்சங்கள் எவ்வாறு ஒரு முகில் கூட்டம் போல கருக்கொள்கின்றன என்றும், அந்த வெற்றி நுட்பங்களை எவ்வாறு கருக்கொள்ள வைப்பதென்பதும் அந்த நூலில் இடம் பிடித்துள்ள கருப்பொருளாகும். இந்த நூல் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது விரைவில் வெளிவரவுள்ளது.

பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் மருத்துவராக அல்லது பொறியியலாளராக கற்க வேண்டும் என்ற தமிழ் பெற்றோரின் எண்ணங்களில் ஏற்படும் மாற்றங்களின் அடையாளமாகவும் இந்த முயற்சி அமைந்துள்ளது.

கல்வி என்பது நமது அகத்தின் ஆற்றலை மேலும் கூர்மைப்படுத்துவதாக அமைதல் வேண்டும். அந்த வகையில் இது போன்ற புதிய துறைகளில் தமிழ் மாணவர்கள் தொடர்ந்து காலடி பதிக்க வேண்டும் என்று பலர் வாழ்த்தி மலர்ச்செண்டுகளை வழங்கினார்கள். ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது இது போன்ற உயர்வுகளாலும் தீர்மானமாகிறது என்பதற்கு இந்த நிகழ்வு எடுத்துக்காட்டாக அமைந்தது.

அலைகள் 29.06.2019

Related posts