இலங்கையில் இன்று முக்கியம் பெற்ற செய்திகளில் சில..

2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 05.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 5ம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீர 2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

இதனையடுத்து 06 நாட்கள் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீது விவாதம் நடத்தப்பட்டு, கடந்த 12ம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 119 பேர் வாக்களித்துடன், எதிராக 76 பேர் வாக்களித்திருந்தனர்.

இந்தநிலையில் இன்றையதினம் ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதுடன், கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஜேவிபி ஆகியன எதிராக வாக்களிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வரவு செலுவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எவ்வித தீர்மானமும் இன்றி உள்ளது.

————-

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை இந்தியாவே தடுத்து வருகின்றதென வடக்கு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று(04) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது,

இலங்கை தொடர்பான விடயம் ஜெனிவாவில் பேசப்படும் போது இந்தியாவின் நிலைப்பாடு 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்றே கூறி வருகின்றது.

இதனையே ஆராம்ப காலத்திலிருந்து கூறி வருகின்றது. இதற்கு அப்பால் ஏனைய விடயங்களில் இந்திய அரசு கவனம் செலுத்துவதில்லை.அதற்காக அவர்கள் தயாராகவும் இல்லை.தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில் அவ்வாறான ஒரு விசாரணையை இந்தியா விரும்பவில்லை.அதனை தடுக்கும் முயற்சிகளையே அவர்கள் செய்து வருகின்றனர்.

இந்திய அரசு தனது தேசிய பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டே செயற்படுகின்றது.தமிழ் மக்களின் நலனை பார்க்கவில்லை.இதனால் சர்வதேச விசாரணைக்கு இந்தியா எந்த விதத்திலும் உதவாது. மாறாக அதனை தடுப்பதில் மும்மரமாக பணியாற்றும் என்பதே உண்மை என்றார்.

————

யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதும் பொறுப்புக் கூறல் தொடர்பில் முன்னேற்றம் எதனையும் காணவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.

வெளிநாட்டு நீதிபதிகளையோ கலப்பு நீதிமன்றத்தையோ அனுமதிக்கப்போவதில்லை என்று கூறும் அரசாங்கம் உள்ளக விசாரணையூடாக என்ன செய்துள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

பாதுகாப்பு மற்றும் சுற்றாடல்,மகாவலி அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி உண்மையில் முயற்சிப்பதாக இருந்தால் பொறுப்புக் கூறல் மற்றும் காணி விடுவிப்புகள் என்பன தொடர்பாக அவர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

பாதுகாப்பு அமைச்சிற்காக இந்த வருடத்தில் கூடுதல் தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதும் தொடர்ந்தும் பாதுகாப்பிற்கு அதிக தொகை ஒதுக்கப்படுகின்றது.

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் விடுவிப்பு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் பல தடவைகள் கலந்துரையாடியுள்ளோம். யுத்த காலத்தில் பாதுகாப்பு தரப்பினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் காணிகளில் பல காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இன்னும் விடுவிக்கப்படாது காணிகள் இருக்கின்றன.

இதில் கேப்பாபுலவு காணி விடுவிப்பு தொடர்பில், நீண்ட காலமாக மக்கள் போராடி வருகின்றனர். தேசிய பாதுகாப்புக்கு அவசியமில்லாத இடங்களிலும் இராணுவத்தினர் மக்களின் காணிகளை வைத்திருக்கின்றனர். அனைத்து தனியார் காணிகளும் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்படுமென 2015 இல் ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார்.

அவர் வாக்களித்தது போன்று மீண்டும் அந்த காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.

யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதும் பொறுப்பு கூறல் விடயத்தில் இன்னும் முன்னேற்றங்களை காணவில்லை. இதனால் வெளிநாட்டு நீதிபதிகளை இங்கு அழைத்து வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் நிலையில் உள்ளக பொறிமுறையின் கீழ் எதனை செய்துள்ளீர்கள் .

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பிரகாரம் இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் 3022 பேர் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர்.

இது தொடர்பாக ஒரு விசாரணையேனும் நடைபெற்றுள்ளதா? உள்நாட்டு விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.

———–

வடக்கிலுள்ள அரசியல் தலைவர்கள் என்ன கூறினாலும் பொதுமக்கள் முப்படையுடன் நெருக்கமாவே இருக்கிறார்கள். முப்படையை பலவீனப்படுத்த இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப அரச காணிகள் ஒருபோதும் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.

பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் ,மகாவலி அபிவிருத்தி அமைச்சுக்கள் மீதான குழுநிலைவிவாதத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கொலன்னாவை குப்பை பிரச்சினையையடுத்து அறுவைக்காட்டில் வெளிநாட்டு உதவியுடன் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளோம். இவ்வாறான திட்டம் முன்னெடுக்கப்படும் போது அப்பிரதேச மக்களின் எதிர்ப்பு வரும். நாட்டில் எப்பகுதியில் இவ்வாறான திட்டம் செயற்படுத்தப்படும் போதும் பிரதேச மதத் தலைவர்களின் தலைமையில் போராட்டம் நடைபெறும். முழுநாட்டிலும் காணப்படும் குப்பை பிரச்சினை தொடர்பில் அராங்கம் பொதுவான கொள்கையை முன்னெடுக்க வேண்டும். இவற்றின் போது ஒரு தரப்பு எதிர்த்தாலும் நாட்டுக்காக முடிவு எடுத்து செயற்படுத்த வேண்டும். குப்பை முகாமைத்துவம் உள்ளூராட்சி சபைகளின் கீழே வருகிற ​போதும் அதற்கு தேவையான இயந்திரங்கள் உள்ளூராட்சி சபைகளிடம் கிடையாது.

இந்த வருட இறுதிக்குள் உமா ஓயா திட்டம் நிறைவு செய்யப்படும்.மகாவலி காணிகள் அரசியல் ரீதியில் பகிர்ந்தளிக்கப்படுவதாக சிலர் குற்றஞ்சாட்டினார்கள்.காணி அற்றவர்களுக்கு காணி வழங்குகையில் கட்சி ரீதியில் செயற்பட முடியாது. அமைச்சர்களுக்கோ எம்.பிக்களுக்கோ தேவையானவாறு பட்டியல் தயாரிக்கப்படுவதில்லை. முப்படையினர் நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றுகின்றனர். வடக்கிலுள்ள அரசியல் தலைவர்கள் என்ன கூறினாலும் பொதுமக்கள் எமது முப்படையுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். அங்கு வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட போது முப்படையினர் தான் அவர்களுக்கு உதவி வழங்கினார்கள்.முப்படையை பலவீனப்படுத்த இடமளிக்க மாட்டேன்.

கடற்படைக்கு கப்பல் குறைபாடும் விமானப் படைக்கு விமான தட்டுப்பாடும் இருக்கிறது. முப்படைக்கு தொழில்நுட்ப அதிகாரிகளை சேர்த்துக் கொள்வதால் அந்நிய செலாவணியை அதிகரிக்க முடியும்.

பொலிஸ் திணைக்களமும் அதன் கீழுள்ள விசேட அதிரடிப்படையும் முக்கிய பங்காற்றி வருகிறது.போதைப்பொருளை ஒழிக்க அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு பாராட்டும் விருதும் வழங்கி வருகிறோம். பொலிஸை விமர்சிப்பதோ கௌரவக் குறைவாக நடத்துவதோ உகந்ததல்ல. பொலிஸார் 12 மணி ​நேரம் உணவின்றி பட்டினியாக செயற்படுகிறார்கள். பொலிஸ் சேவையை மாற்ற வேண்டும். எனது இராஜாங்க அமைச்சர்களாக இருக்கும் அஜித் மான்னப்பெருமவும் ருவன் விஜேவர்தனவும் சிறந்த நேர்மையான அமைச்சர்களாவர். எனது கொள்கைகளுக்கு உகந்தவர்களான அவர்கள் இருவரையும் கஷ்டப்பட்டு தேடி எடுத்தேன் என்றார்.

———-

வடக்கு,கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்துவதிலுள்ள தடங்கல்களை களைய,இம்மாகாணங்கிலுள்ள அரசியல் தலைவர்கள், படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட வேண்டுமென இரண்டு மாகாணங்களின் ஆளுநர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

வட, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆறாவது அமர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் (03) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.இதன்போதே ஜனாதிபதி இப்பணிப்புரையை விடுத்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இம்மாகாணங்களில் அபிவிருத்தியைத் துரிதப்படுத்தவென கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதி வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியை ஸ்தாபித்தார்.இதன் செயற்பாடுகள் குறித்து ஆராயும்பொருட்டு நடந்த கூட்டத்தில் நிலைமைகள் தொடர்பில் அதிகாரிகள் விளக்கினர்.

இங்குள்ள காணிகளில் பெருமளவு விடுவிக்கப்பட்டுள்ளதாகப் படையினர் தெரிவித்தனர். அதிகாரிகளின் கருத்தை செவிமடுத்த பின்னர் ஜனாதிபதி தெரிவித்ததாவது, அபிவிருத்திகளுக்குத் தடையாகவுள்ளவற்றை அடையாளம் காண்பதில் துரித செயற்பாடு அவசியம்.

கலந்துரையாடல் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகளை முன்மொழிவுகளுடன் தன்னிடம் சமர்ப்பிக்கவும். எதிர்வரும் மே மாதத்திற்குள் இப்பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

2009ஆம் ஆண்டு மனிதநேய மீட்புப் பணிகள் முடிவுக்கு வந்தபோது வட, கிழக்கு மாகாணங்களின் சுமார் 84,675ஏக்கர் காணிகள் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. கன்னிவெடிகள் அகற்றப்பட்ட பின்னர் 2015க்குப் பிறகு காணிவிடுவிப்புகள் துரிதமாக்கப்பட்டன.

இதுவரை 2019மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை பாதுகாப்பு படைகள் வசம் இருந்த 84,675ஏக்கர்களில் 71,178ஏக்கர்கள் விடுவிக்கப் பட்டுள்ளன. இன்னும் பல காணிகள் விடுவிக்கப்பட

உள்ளன.எஞ்சியுள்ள நிலங்களில் நாட்டின் பாதுகாப்பிற்கு பாதகம் ஏற்படாத நிலங்கள் விரைவாக விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்ட அவ்விரு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன, பாதுகாப்பு செயலாளர், அரசாங்க அதிபர்கள், முப்படை தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர் .

————

தெற்காசியாவில் நவீன கல்விமுறை நடைமுறைப்படுத்தப்படும் நாடாக இலங்கையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடிகள் காணப்பட்ட போதும் கல்விக்காக அதிகளவான நிதியை செலவழித்து கல்வித்துறையை பாரியளவு மாற்றத்துக்குள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மிலாகிரிய சென். பாவுல் மகளிர் கல்லூரியின் பிரதான கட்டடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு எரையாற்றும் போதே பிரதமர் நேற்று முன்தினம் (3) இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், 13வருட கல்வியை கட்டாயப்படுத்தியதன் ஊடாக கரும்பலகையை பயன்படுத்தி கல்வியை கற்ற யுகம் இன்று வயிட் போர்ட், ஸ்மார்ட் வகுப்பறை வரை வளர்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். இந்நாட்டு மாணவர்களுக்கு நவீன அறிவின் ஊடாக முன்னோக்கிச் சென்று உலகை வெல்லும் வழியை திறந்து விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கைத்தொழில் புரட்சியைத் தொடர்ந்து இன்று தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. அந்த தொழில்நுட்பமானது இன்று எமது கல்வி முறையிலும் இணைக்கப்பட்டுள்ளது. அன்று அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு தொடர்ந்து கல்வி பரவியதைப் போன்று இன்று நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக கல்வி முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இன்று முழுமையாக உலகம் மாற்றம் அடைந்துள்ளது. இதனடிப்படையில் இன்று புது யுகமொன்றில் அடியெடுத்து வைத்துள்ளோம். அதன் மூலம் கல்வியை கற்றுக் கொள்ள முடியும். உலகமானது இன்று ஸ்மார்ட் தொழில்நுட்ப யுகத்திற்கு மாற்றமடைந்துள்ளது. இந்த யுகமும் இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் மாற்றமடைந்து வேறு யுகமொன்று உருவாகும்.

இலங்கையையும் ஸ்மார்ட் கல்வி முறைக்கு இட்டுச் செல்ல வேண்டும். அதனடிப்படையில் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறையை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்தோம்.இன்று அது பல பாடசாலைகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் முதலாவது ஸ்மார்ட் கல்லூரியை குருநாகலில் ஆரம்பித்தோம். ஆசிரியர்களுக்கு இது தொடர்பான பயிற்சிகளை அதிகமாக வழங்க வேண்டும். ஏனைய பாடசாலைகளிலும் இதனை எதிர்வரும் காலங்களில் ஆரம்பிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். கல்வியியல் கல்லூரிகளின் பயிற்றுவிக்கப்பட்ட 10,000ஆசியர்களை இவ்வருடத்தினுள் கல்விக் கட்டமைப்பினுள் உள்வாங்க உள்ளோம். பாடசாலை ஆசிரியர்களை போலவே அதிபர்களுக்கும் நவீன அறிவை பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. எமது பாடசாலைகளின் அதிபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, அந்நாடுகளின் கல்வி முறையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் தொடர்பில் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டியுள்ளது என்றார்.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், மின்சக்தி, எரிசக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க,பாடசாலை அதிபர் சுமேதா ஜயவீர ஆகியோருடன் அரச அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

———–

வரவு- செலவு திட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர் குறித்த வரவு – செலவுதிட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மாத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts