இந்தியாவின் தேர்தல் களம் இன்றைய சூடான தகவல்கள்..

கருத்துக்கணிப்பில் மோடி முன்னணி..!

பாலகோட் தாக்குதல், 10% இடஒதுக்கீடு, விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் ஆகிய திட்டங்களால் மோடிக்கு அமோக ஆதரவு ஏற்பட்டுள்ளதாகவும், ரஃபேல் விவகாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

லோக்நிதி- தி இந்து ஆங்கில நாளிதழ், திரங்கா தொலைக்காட்சி, சிஎஸ்டிஎஸ் ஆகியவை இணைந்து மார்ச் கடைசி வாரத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை நடத்தின. இதற்காக இந்தியா முழுவதும் இருந்து 19 மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

———–

பன்னீர் வேன் புரள புரள பிரச்சாரம்..!

உதகை அருகே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தப்படவிருந்த பிரச்சார வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தியாகராஜனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு உதகை வந்தார். உதகையில் உள்ள சுலைவன் கோர்ட் ஹோட்டலில் தங்கினார்.

————-

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வெல்லும்..!

18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 முதல் 11 தொகுதியில் வெற்றிப்பெற வாய்ப்புள்ளது என பண்பாடு மக்கள் தொடர்பகம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பண்பாடு மக்கள் தொடர்பகம்’ தேர்தல் நேரத்தில் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில், எந்த கட்சி எவ்வளவு இடங்களில் வெற்றிபெறும் என்ற கருத்துக்கணிப்பை ‘பண்பாடு மக்கள் தொடர்பகம்’ இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது.

மார்ச் 17 முதல் ஏப்ரல் 3 வரை 40 தொகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், லயோலா கல்லூரி முன்னாள் மாணவருமான சி.திருநாவுக்கரசு வழிகாட்டுதலின் பேரில் கருத்துக் கணிப்பு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக 9 முதல் 11 தொகுதியில் வெற்றிப்பெற வாய்ப்புள்ளது எனவும், அதிமுக 2 அல்லது 3 தொகுதிகளில் வெற்றிப்பெற வாய்ப்புள்ளது எனவும், அமமுக 3 முதல் 4 தொகுதிகளில் வெற்றிப்பெறும் வாய்ப்பு முன்னிலையில் உள்ளது எனவும், கணிக்க முடியாத தொகுதிகளாக 2 தொகுதிகள் உள்ளது எனவும் அக்கருத்துக்கணிப்பு கூறுகிறது.

———-
ஓட்டுக்கு பணம் வழக்கு தள்ளுபடி..!

தமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், தமிழகத்தில் ஏற்கனவே ஓட்டிற்கு பணம் கொடுக்கும் விவகாரத்தால் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்ட ஒரு கசப்பான வரலாறு இருக்கிறது என்றும், இந்த முறையும் அனைத்து கட்சியினருமே வாக்கிற்கு பணம் கொடுக்கும் நடைமுறையை செய்து வருகிறார்கள் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையமும் முடிந்த வரையில் தான் இதனை தடுக்க முடிகிறது என்றும், ஆனாலும் அநேக இடங்களில் பணம் பட்டுவாடா நடந்து வருவதாக புகார் கூறியுள்ளார். எனவே, உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் ஒரு குழுவை அமைத்து பணப்பட்டுவாடாவை தடுக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தற்பொழுது இந்த மனுவை உடனடியாக எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளனர்.

ஏனென்றால் தேர்தல் சம்பந்தமாக பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற அதிகமான வழக்குகளை நீதிமன்றம் ஏற்கனவே சந்தித்துள்ளதாகவும், தற்பொழுது இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளனர். அடுத்த வாரங்களில் இந்த வழக்கு பட்டியலிடப்பட்டால் விசாரிப்பதாக நீதிபதிகள் உறுதி அளித்துள்ளனர். மேலும் இன்றையதினம் நிறைய வழக்குகள் விசாரணைக்கு உள்ளதால், இந்த பொதுநல மனுவை அவசர வழக்காக விசாரிப்பதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

————-

நான்கு நாட்கள் மதுபான கடைகள் பூட்டு..!

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16, 17, 18 மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

————-

காங்கிரஸ் வெல்லும் மு.க.ஸ்டாலின் முழக்கம்..!

கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தல் மத்தியில் மோடி தலைமையில் அமைந்துள்ள பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுகிற தேர்தலாக இருக்கும் என்றார். நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற அந்த முழக்கத்தோடு நம் கையில் மாநில ஆட்சி, நாம் கை காட்டுகிற மத்திய ஆட்சி, முடியட்டும் இந்த பாசிச ஆட்சி, விடியட்டும் மக்களாட்சி என்ற குரலோடு திருவாரூரிலே கடந்த 20-ம் தேதி தாம் தம்முடைய பயணத்தை துவக்கியதாக ஸ்டாலின் கூறினார். நாட்டிலே நல்ல ஆட்சியை உருவாக்க தமிழக வாக்காளர்கள் துணை நிற்க வேண்டும் என்றார். மத்தியில் ஆட்சி மாற்றம் நிச்சயம். எனவே கரூர் மக்களவை தொகுதி தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிடும் ஜோதிமணிக்கு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

————-

ராகுல் காந்தியிடம் ஒரு கார்கூட இல்லை..!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து விவரங்கள் மற்றும் அவருக்கு எதிரான வழக்குகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்று இருந்தன. அதன் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதன்படி ராகுல் காந்தியின் அசையும் சொத்து மதிப்பு ரூ.5.80 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.10.08 கோடி என மொத்தம் ரூ.15.88 கோடி சொத்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. இதில் 333.3 கிராம் தங்கமும் அடங்கும்.

கையிருப்பு ரூ.40 ஆயிரம்

எம்.பி. பதவி மூலம் கிடைக்கும் ஊதியம், ராயல்டி, வாடகை, பத்திரங்கள் மூலமான வட்டி உள்ளிட்டவற்றை வருமானமாக காட்டப்பட்டு உள்ளது. ராகுல் காந்தியின் 2017-18-ம் ஆண்டு வருமானம் ரூ.1.12 கோடி ஆகும்.

மேலும், ராகுல் காந்தியிடம் ரொக்கமாக ரூ.40 ஆயிரமும், பல்வேறு வங்கிகளில் ரூ.17.93 லட்சம் டெபாசிட்டும் செய்யப்பட்டு இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைப்போல பத்திரங்கள், பங்குகள் என ரூ.5.19 கோடி முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

5 வழக்குகள்

பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ரூ.72 லட்சம் கடன் இருப்பதாகவும், தனக்கு சொந்தமாக கார் இல்லை என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளார். அத்துடன் டெல்லி சுல்தான்பூரில் உள்ள பரம்பரை சொத்தான பண்ணை நிலத்தில் பங்கும், குருகிராமில் 2 அலுவலகங்களும் சொந்தமாக உள்ளன.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டப்படிப்பு முடித்து இருப்பதாக கூறியுள்ள ராகுல் காந்தி, தனக்கு எதிராக 5 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதில் மராட்டியத்தில் 2 வழக்குகளும், ஜார்கண்ட், அசாம் மற்றும் டெல்லியில் தலா ஒரு வழக்கும் அடங்கும் என அவரது வேட்புமனுவில் கூறப்பட்டு இருந்தது.

———

டெல்லியில் எங்களது குரல் ஒலிக்கும் : கமலஹாசன்

யார் பிரதமராக வந்தாலும் எங்களது குரல் டெல்லியில் ஒலிக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பேசினார்.

மதுரை மக்களவைத் தொகு தியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் எம்.அழகர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் கமலஹாசன் மதுரை மேலமாசி வீதியில் நேரு ஆலாய சுந்தர விநாயகர் கோயில் அருகே நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

நான் சினிமாவில் நடிப்பதற்கு சம்பளம் கொடுக்கிறார்கள். அது அத்துடன் கழிந்து போய் விட்டது. ஆனால் மக்களின் அன்புக்குப் பிரதிபலனாக நான் ஒன்றுமே செய்யவில்லை. இனி என்னுடைய எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காகத்தான். அதை முடிவு செய்துவிட்டுத்தான் களத்தில் இறங்கியுள்ளேன்.

—————

Related posts