வாரிசுகளுக்கு இடம் அளித்தது ஏன்? திமுக விளக்கம்

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானதிலிருந்தே வாரிசுகளுக்கு இடம் அளித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் வாரிசுகளுக்கு இடம் அளித்தது ஏன் என முரசொலியில் திமுக விளக்கம் அளித்திருக்கிறது.

திமுக வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி (வடசென்னை) தங்கபாண்டியன் மகள், தங்கம் தென்னரசுவின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை), முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் (மத்திய சென்னை), துரைமுருகனின் மகன் டி.எம்.கதிர் ஆனந்த் (வேலூர்), க.பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி (கள்ளக்குறிச்சி), கருணாநிதியின் மகள் கனிமொழி (தூத்துக்குடி) ஆகிய 6 வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

‘குடும்ப வாரிசுகள் அல்ல, கொள்கை வாரிசுகள்’

இந்நிலையில், திமுகவில் இருப்பது, ‘குடும்ப வாரிசுகள் அல்ல, கொள்கை வாரிசுகள்’ என்ற தலைப்பில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது.

கட்டுரையாளரின் பெயர் சிலந்தி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாரிசுகள் என்பதற்காக மட்டும் வேட்பாளர் பட்டியலில் இடம் தரப்படுவதில்லை, கட்சியின் வளர்ச்சிக்காகப் பணியாற்றுவதால் தான் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்ப்பட்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் முன்னணி நிர்வாகிகளான துரைமுருகன், பொன்முடி ஆகியோரின் மகன்கள், தந்தையுடன் சேர்ந்து கட்சிக்கு ஆற்றிய பணிகள் புறந்தள்ளப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதேபோல், டாக்டர் கலாநிதி வீராசாமி , ஆற்காடு வீரசாமியின் குடும்ப வாரிசு மட்டுமன்றி, கொள்கை வாரிசுகளில் ஒருவராகத் திகழ்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழச்சி தங்கபாண்டியன், கட்சிப் பணிக்காக பேராசிரியர் பதவியைத் துறந்து, திமுக மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியவர் என வாரிசுகளை ஏன் களமிறக்கினோம் என்று முரசொலியில் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts