படமாகும் அன்னை தெரசா வாழ்க்கை

அன்னை தெரசா வாழ்க்கை படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகளின் வாழ்க்கை கதைகளை படமாக்குவதில் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். நடிகர்கள் என்.டி.ராமராவ், சஞ்சய்தத், நடிகைகள் சில்க் சுமிதா, சாவித்திரி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் உள்ளிட்ட பலரது வாழ்க்கை கதைகள் ஏற்கனவே படங்களாகி வெளிவந்துள்ளன.

தற்போது பிரதமர் நரேந்திரமோடி, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து, மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் மிதாலிராஜ், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் வாழ்க்கையும் படமாகி வருகிறது.

இந்த வரிசையில் அன்னை தெரசா வாழ்க்கையையும் சினிமா படமாக எடுக்கும் முயற்சிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தன. தற்போது இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை சீமா உபத்யாய் இயக்குகிறார். ஹாலிவுட் மற்றும் இந்தி நடிகர்-நடிகைகள் நடிக்க உள்ளனர்.

அல்பேனியா நாட்டை பூர்வீகமாக கொண்ட அன்னை தெரசா இந்திய குடியுரிமை பெற்று கொல்கத்தாவில் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையை நிறுவி 45 வருடங்களுக்கு மேலாக ஏழைகள், ஆதரவற்றோர் நோயாளிகளுக்கு தொண்டு செய்து மறைந்தார். அவரது சேவைக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Related posts