கொலை சதி தொடர்பில் சாட்சியங்கள்

பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மார்ச் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

அவர் இன்றையதினம் (06) கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.

இதன்போது, குறித்த கொலை சதி தொடர்பில், அவருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் காணப்படுவதாக, சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் நீதிமன்றில் விளக்கமளிக்கப்பட்டது.

ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரை கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்துள்ளாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதான இந்தியர் மெர்சிலி தோமஸ், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், நாலக்க டி சில்வா கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த வருடம் ஒக்டோபர் 25 ஆம் திகதி முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts