வைரமுத்து மீது தேசிய பெண்கள் கவுன்சிலில் சின்மயி புகார்

மீடூ விவகாரம் தொடர்பாக வைரமுத்து மீது பெண்களுக்கான தேசிய கவுன்சிலில் புகார் அளித்துள்ளார் பாடகி சின்மயி.

ஹாலிவுட்டில் ஆரம்பிக்கப்பட்ட மீடூ ஹேஷ்டேக் இந்தியாவில் தொடர்ந்தது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது. இதில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய புகார் பெரும் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் சுசி கணேசன், நடிகர் அர்ஜுன் ஆகியோர் மீது மீ டூ புகார்கள் வந்தன.

இதனைத் தொடர்ந்து கடும் சர்ச்சைக்கு உள்ளானார் சின்மயி. தொடர்ச்சியாக வைரமுத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, அவருடைய பேச்சை வைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் சாடி வந்தார் சின்மயி.

இந்நிலையில் முதன்முறையாக வைரமுத்து மீது பெண்களுக்கான தேசிய கவுன்சிலில் புகார் அளித்துள்ளார் சின்மயி. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பெண்களுக்கான தேசிய கவுன்சிலில் வைரமுத்துக்குவுக்கு எதிராக நான் புகார் பதிவு செய்துள்ளேன். இப்போதைக்கு சட்டப்பூர்வமாக எனக்கிருக்கும் ஒரே சரியான வழி இது மட்டுமே. இப்பிரச்சினைக்கு சரியான தீர்வைத் தர கவுன்சிலைச் சேர்ந்த மேனகா காந்தி எனக்கு உதவுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்நிலையில், தமிழ்சினிமாவில் என் மீதுள்ள தடை தொடர்கிறது. விஷால் அவர்களுக்கு நான் பல மாதங்களுக்கு முன்னரே கடிதம் அனுப்பிவிட்டேன். அவர் என்ன முயற்சித்தும், அவரது சங்கம் டப்பிங் சங்கத்தின் செயல்பாடுகளில் தலையிடமுடியாது எனத் தெரிகிறது. விஷாலின் முயற்சிக்கு மிக்க நன்றி.

டப்பிங் யூனியனின் தலைவர் ராதாரவி அவர்கள் நீதிமன்றத்தில் என்னை அடுத்த சில வாரங்களில் சட்ட ரீதியாக சந்திக்கவுள்ளார். இதோடு, உங்கள் பார்வைக்கு முன் ராதாரவி மற்றும் அவரது ஆதரவாளர்கள், தொடர்ந்து என்னைப் பற்றி மோசமாகப் பேசி அவமதித்துக் கொண்டிருக்கின்றனர். என்னை வாழ்த்துங்கள்.

இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.

Related posts