காணாமல்போனோர் ஒருவருட பூர்த்தியை

காணாமல்போனோர் அலுவலகம் தனது செய்றபாடுகளை ஆரம்பித்து, இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அதனை முன்னிட்டு இம் மாதம் முதல் தொடர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதாக காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனோர் அலுவலகம் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியிலிருந்து தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது.

காணாமல் போனோரின் உறவுகளைச் சந்தித்து தகவல்களை சேகரித்ததுடன், பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் சந்திப்புக்களை நடத்தியிருந்தது. அத்தோடு கடந்த ஆகஸ்ட் மாதம் காணாமல் போனோர் தொடர்பிலும், அவர்களின் உறவினர்கள் தொடர்பிலும் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய பரிந்துரைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையையும் வெளியிட்டிருந்தது.

மேலும் மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் அக்கறையுடன் செயற்பட்ட காணாமல் போனோர் அலுவலகம், அதன் அகழ்வுப் பணிகள் மற்றும் மேலதிக பரிசோதனைகள் என்பவற்றுக்கு அவசியமான உதவிகளையும் தொடர்ச்சியாக வழங்கிவந்தது.

இந்நிலையில் காணாமல் போனோரின் உறவினர்கள் தம்மை அணுகுவதை மேலும் இலகுபடுத்தும் நோக்கில் இம்மாதம் மன்னார் மாவட்டத்தில் இல 5, புகையிரதவீதியிலும், மாத்தறை மாவட்டத்தில் இல 54, தர்மாராம வீதி, கோட்டையிலும் தமது பிராந்திய அலுவலகங்களை திறந்து வைப்பதற்கு காணாமல் போனோர் அலுவலகம் திட்டமிட்டுள்ளது.

அத்தோடு காணாமல் போனோர் விவகாரத்தில் முக்கிய அம்சமாகவுள்ள மனித எச்சங்கள் தொடர்பான உண்மையினை கண்டறிவது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இம்மாதம் 9 ஆம் திகதி மாலை 5 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ‘அறிவியல் ரீதியாக உண்மையைத் தேடலில் மானுடத்தை மதித்தல்’ எனும் தலைப்பிலான பேருரை ஒன்றையும் காணாமல் போனோர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.

Related posts