உடுப்பு சரியில்லை என்று ஓடிய வடிவேலுவுடன் சிம்புதேவன் சமரசம்

இம்சை அரசன் 23 ம் புலிகேசி பாகம் இரண்டு தொடர்பாக வடிவேலுவுக்கும் இயக்குனர் சிம்புதேவனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் மேடைகளில் விஜயகாந்துக்கு எதிராக பேசி சிக்கலில் மாட்டிக் கொண்ட வடிவேலு பல ஆண்டுகள் நடிக்க முடியாதபடி தேக்கமடைந்ததும் தெரிந்ததே.

இதனால் வடிவேலின் காலம் முடிந்துவிட்டதென அவரை திரையுலகு அடிமாட்டு விலையில் பயன்படுத்த நினைத்தது. மாறாக வடிவேலுவோ தான் பழைய இடத்திலேயே இப்போதும் இருப்பதாக மனப்பால் குடித்தார். தனது நிலையை உணர அடியோடு மறுத்தார். கையில் இருந்த பணம் அவரை அப்படி எண்ண வைத்தது.

இந்த இடைவெளியில் யோகிபாபு, சூரி போன்றவர்கள் இவரைவிட மேலே போய்விட்ட செய்திகூட அவருக்கு தெரியாது. அவற்றையெல்லாம் காது கொடுத்து கேட்கும் பழக்கமும் பழைய கவுண்டமணி போல இவருக்கும் இல்லை.

தான் இப்போது வீழ்ச்சி கட்டத்தில் இருப்பதை கடைசியாக வெளியான படங்களைப் பார்த்தும் வடிவேலு உணரவில்லை என்பது பெரும் சோகம்.

முன்னதாக வடிவேலுவும் சிங்கமுத்துவும் மோதி இப்போது இருவருமே குப்புற விழுந்ததுதான் இருவரும் கண்ட மிச்சம். என்பதை காலம் உணர்த்தியுள்ளது. அதிமுகவும், திமுகவும் இருவரையும் கறி வேப்பிலைகளாக பயன்படுத்திவிட்டு இப்போது தூக்கி வீசிவிட்டன.

நாய்க்கேன் போர்த்தேங்காய் நடு வீடெல்லாம் போட்டு உருட்டவோ என்பது போல வடிவேலுவுக்கும் சிங்கமுத்துவுக்கும் தேவையில்லை அரசியல் பேசி மற்றைய நடிகர்களுக்கு வழி விட்டு கொடுத்துவிட்டார்கள் என்பதே நிஜமாகும்.

இருந்தாலும் ஒரு காலத்தில் உயர்வாக இருந்த ஈகோதான் வடிவேலுவை இன்றுவரை ஆட்டிப் படைக்கிறது. இப்போது இம்சை அரசன் இரண்டாம் பாகத்தை குழப்பியடித்து ஓடவும் அதுவே காரணமெனப்பட்டது.

உடுப்பு சரியில்லை என்று ஓடினாலும் வடிவேலு அதிக பணம் கேட்டே ஓடியிருப்பார் என்பது ஒரு இரகசியமல்ல. இனி எதிர்பார்த்த பணம் கிடைக்காது என்பது தெரிந்து ஆடுகளம் திரும்பியுள்ளார்.

இதனால் மறுபடியும் புலிகேசியாக நடிக்க இருக்கிறார். ஆனால் வடிவேலுவுக்கு சிம்புதேவனும் இளைத்தவரல்ல. ஏற்கெனவே வெளியான வடிவேலுவின் எலி, தெனாலிராமன் படங்களுக்கு நடந்த கெதி தெரிந்திருந்தால் வடிவேலு தப்பியோடிய கையுடன் தானும் தப்பி ஓடியிருக்கலாம்.

இப்போது வடிவேலு திரும்பியிருப்பதால் அவருக்கு நஷ்டமில்லை.. படம் கவிழ்ந்தால் ஷங்கருக்கே நஷ்டம் ஏற்படும். காரணம் வடிவேலு படங்களுக்கான சந்தை கரைந்துவிட்டது. அது கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் நிற்கிறது.

ஏற்கெனவே விஜய்யின் புலி திரைப்படத்தை கவிழ்த்தடித்த சிம்புதேவனுக்கு மூளை மழுங்கிவிட்டதா என்ற சந்தேகம் அப்படத்தை பார்த்த பலருக்கு ஏற்பட்டது. அதுபோல தனது எழுச்சியை தானே கவிழ்த்தடித்த வடிவேலுவுக்கும் ஏதோ பிழை இருப்பதாக பலர் பேசினார்கள்.

ஆனால் இப்போது இந்த இருவரும் சேர்வதால் கூத்து அமோகமாக இருக்கும் என்பது ஷங்கரின் கனவு. ஜெயிக்கப் போவது யார்..?

வருகிறான் இம்சை அரசன் 23ம் புலிகேசி பாகம் இரண்டு.

Related posts