இன்று பிளாக் பிறைடே சிந்திக்க வேண்டிய முக்கிய ஏழு விடயங்கள்

இன்று உலகத்தின் மிகப் பெரிய மலிவு விற்பனைத் திருநாள்களில் ஒன்றான பிளாக் பிறைடே தினமாகும். உலகத்தின் பல நாடுகளில் மலிவு விற்பனை களைகட்டும் திருநாள் இதுவென்று போற்றப்படுகிறது.

இன்றைய நாளில் சாதாரண கடைகள் தமது வருட விற்பனையின் உச்சத்தை ஒரே நாளில் எட்டித் தொடும் விற்பனை நாளாகும், அதாவது நம்மூரில் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் நடக்கும் வர்த்தகம் போல பரபரப்பான நாள்.

வருடாந்த உற்பத்திப் பொருட்கள் இந்த வருடத்துடன் பழையதாகி அடுத்த வருடம் புதிய பொருட்கள் வருவதற்கான வெற்றிடத்தையும் இந்த நாள் ஏற்படுத்துகிறது. சிறப்பாக அமேசான், அலிபாபா போன்ற பாரிய இணைய வர்த்தக நிறுவனங்களுக்கு இன்று வேட்டைத் திருவிழா என்றே கூறலாம்.

பிளாக் பிறைடே என்பது ஒவ்வொரு நவம்பர் மாதத்திலும் வரும் நான்காவது வெள்ளிக்கிழமையன்று வரும். அடுத்து வரப்போகும் டிசம்பர் மாத நத்தார் காலத்திற்கான பரிசுப் பொருட்களை வாங்க சரியான நாளாகவும் இந்த நாளே இருக்கிறது.

சென்ற ஆண்டு அமெரிக்காவில் மட்டும் பிளாக் பிறைடே தினத்தன்று 33 பில்லியன் டாலர்களுக்கு ஒரே தினத்தில் விற்பனை அள்ளிக் கொட்டியது. இதை பார்த்து மற்றைய உலக நாடுகளும் கவரப்பட்டு, பிளாக் பிறைடேயை தாமும் விற்பனைக்கு பயன்படுத்தி காசு பணம் பார்க்க ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் இன்று அதிகாலையே டென்மார்க்கில் பிளாக் பிறைடே களை கட்ட ஆரம்பித்துவிட்டது.

சென்ற ஆண்டு பிளாக் பிறைடேயில் டென்மார்க்கில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் சராசரியாக 2360 குறோணர்களை பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆண்டு இத்தொகையானது 2740 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீசா டென் கோட் மூலமாக 2.1 பில்லியன் குறோணர்கள் பரிமாற்றமடையும் என்று வங்கிகள் கணக்கிடுகின்றன. பிளாக் பிறைடே என்றால் இருட்டான வெள்ளி என்பது பொருளாகும். கண்ணைப் பொத்தி அடி என்பது போல ஏமாற்று என்ற பொருளும் இதற்குள் பொதிந்து கிடக்கிறது.

இருட்டு தன்னைக் காட்டும் ஆனால் தனக்குள் இருக்கும் பொருட்களை காட்டாது என்று அக்காலத்தே உமாபதி சிவாச்சாரியார் சொன்ன சைவசித்தாந்த கருத்தும் இத்தருணம் மனதில் வந்து சிவாச்சாரியாரை எண்ண வைக்கிறது.

ஆகவே பிளாக் பிறைடே என்று கிளம்புவோர் கவனமாக இருக்க வேண்டும். இத்தகைய மாந்தர் சிந்திக்க வேண்டிய ஏழு விடயங்களை டேனிஸ் ஊடகங்கள் எழுதியுள்ளன.

01. உண்மையில் இது மலிவு விலைதானா என்பதை பழைய விலையுடன் ஒப்பிட்டு ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும்.

02. விளம்பரத்தில் ஒரு விலையும் கடையில் ஒரு விலையும் போட்டிருப்பார்கள் எப்போதும் எச்சரிக்கை அவசியமாகும்.

03. கடைக்கு போக முன் என்ன பொருளை வேண்டப் போகிறேன் என்ற திட்டம் இல்லாமல் போகக் கூடாது. எந்த ஊர் போகிறேன் என்று தெரியாமல் பேருந்து நிலையம் போய் பஸ்சில் ஏறி, போகக்கூடாத ஊருக்கு போனதுபோல போகக் கூடாது. மலிவு என்பதால் தேவையற்ற பொருட்களை வேண்டி வந்து வீட்டில் குவித்துவிட்டு தலையைச் சொறிதல் கூடாது.

( வீட்டுக்கு வாடகை கட்டுகிறோம். ஒரு பொருளை பாவிக்காமல் ஆண்டுக் கணக்கில் வீட்டுக்குள் வைத்திருந்தால் அதன் விலை கூடும். )

04. மலிவு விலை என்பதால் மின்சாரப் பொருட்கள் பழுதடையலாம் ஆகவே அவற்றுக்கு மேலதிகமாக இன்சூரன்ஸ் செய்ய வேண்டும்.

05. வாங்கிய பொருளை 14 தினங்களுக்குள் திருப்பிக் கொடுக்கலாமா என்பதை கேட்டறிய வேண்டும்.

06. பொருட்களுக்கான பற்றுச் சீட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். பழுதடைந்தால் மாற்ற இது அவசியம்.

07. பணத்தை தாள் நாணயமாக கொடுக்காமல் வங்கி அட்டை வழியாக கொடுக்க வேண்டும். அப்போதுதான் பணம் கொடுத்தமைக்கான ஆதாரம் இருக்கும்.

மேலும் இருட்டான வெள்ளி என்பதால் இறால் போட்டு சுறா பிடித்துவிடுவார்கள். அதாவது ஒரு பொருளுக்கு மிகக் குறைவான மலிவு விலையை காட்டிவிட்டு, பக்கத்தில் இருக்கும் விலை கூடிய பொருட்களையும் மலிவு பொருட்கள் போல காட்டி தலையில் கட்டிவிடுவார்கள்.

பொருட்களை நூகர்வோர் ஏமாளிகளா..? இல்லை விற்போர் ஏமாளிகளா..? என்ற போட்டி நடக்கிறது. இருட்டு அறையில் நடக்கும் முரட்டு குத்து என்றும் இதற்கு பெயரிட்டிருக்கலாம்.

இன்று ஏமாறப்போவது யார்..?

ஏமாற்றி உழைக்கப்போவது யார்..?

வாங்குவோரா இல்லை விற்போரா..?

இரு தரப்பையும் விட, முதலிடாமல் இன்று அதிக இலாபம் உழைக்கப் போவது வரித்திணைக்களம்தான்.

உயிர்த்த வெள்ளி, பெரிய வெள்ளி, ஐப்பசி வெள்ளி எல்லாம் போய் இப்போது வந்திருப்பது கறுப்பு வெள்ளி.

பொதுவாக விடிவெள்ளி வந்தால் பொழுது விடியும் இங்கே கறுப்பு வெள்ளி வருகிறது.. விடியவா போகிறது..?

சிந்திப்பாய் மனிதா..!!

அலைகள் 23.11.2018 வெள்ளி

Related posts