மகிந்த பிறந்தநாள் பாராளுமன்றம் ஒத்தி வைப்பு இன்றைய சிறீலங்கா

பாராளுமன்றம் பல்வேறு சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில் சற்று முன்னர் நான்காவது முறையாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது.

(பின்னிணைப்பு – 1.05 PM) பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதன் பின்னர் 23 ஆம் திகதி காலை 10 மணி வரை பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

பாராளுமன்றம் இன்று கூடியதன் பின்னர் மீண்டும் ஒத்தி வைப்பதற்கு கட்சித் தலைவர்கள் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, பாராளுமன்ற அமர்வை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு இன்று அனுமதி வழங்கப்படாத நிலையில் அமர்வில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

————-

உயர் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு ஒன்று விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக சபாநாயகர், சட்டமா அதிபர் மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளரின் ​பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 27 ஆம் திகதி பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கலைக்கப்பட்டிருந்த பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் மேற்கொண்ட தீர்மானம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பாராளுமன்றம் கூட்டப்பட்டதனால் நாட்டின் அரசியலமைப்பு சீர்திருத்தம் மீறப்பட்டுள்ளதாகவும் இந்த செயற்பாட்டினால் சபாநாயகர் உட்பட பிரதிவாதிகள் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மீறியுள்ளதாகவும் தீர்ப்பு வழங்குமாறு மனுதாரர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

———–

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார். ஜனாதிபதி செயலகத்தில் சர்வகட்சி தலைவர்கள் மாநாட்டுக்கு வருகை தந்த பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்களுடன் கேக் வெட்டி மகிழ்வதை படத்தில் காணலாம்.

————

சபாநாயகர் கரு ஜயசூரிய அரசியலமைப்பையும், பாராளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தையும் தொடர்ச்சியாக மீறி வருவதுடன், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எல்.ரி.ரி.ஈ ஆதரவு புலம்பெயர்வாழ் தரப்பினரின் தேவைகளுக்கு ஏற்ற வகையிலும் அவர் நடந்து கொள்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.

—————

பாராளுமன்றத்தில் நிலவும் குழப்பகரமான சூழ்நிலையை தொடர்ந்தும் முன்னெடுப்பதே ஜே.வி.பியினதும் சபாநாயகரினதும் நோக்கமாகும். அதன் காரணமாகவே இந்த இரு சாராரும் சர்வகட்சி மாநாட்டிக்கு செல்லவில்லை என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இவர்கள் தமது குறுகிய நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு செயற்படுகின்றனர் என்றும் இந்த சூழ்ச்சியின் பின்னணியின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts