அமைச்சரானது ஏன் விளக்கம் தந்த வியாழேந்திரன்..?

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக நான் அமைச்சுப்பொறுப்பையேற்றதுடன் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட 11 கோரிக்கைகளை ஜனாதிபதியிடத்தில் முன் வைத்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றேன் என வியாழேந்திரன் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வியாழேந்திரனிடம் இன்று காலை ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், என்னைப் பொறுத்தவரையில் நாங்கள் கடந்த மூன்றரை வருடங்களாக எதிர்க்கட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியால் கொண்டுவரப்பட்ட வரவுசெலவுத்திட்டங்களுக்கு எதிராக நாங்கள் கைகளை உயர்த்தியுள்ளோம். இவ்வாறு சில பிரேரணைகளுக்கு எதிராகவும் நாங்கள் கரங்களை உயர்த்தியுள்ளோம்.

அதனுடைய உச்சக்கட்டம் என்னவென்றால் ரணில் விக்கரமசிங்கவுக்கு எதிராக கொண்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆதரவு வழங்கியுள்ளோம்.

இந்த மூன்றரை வருட காலத்திலே எமது மக்கள் ஒரு தேசிய ரீதியிலான இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை நோக்கிப் பயணிக்கின்ற வேளையிலே எமது மக்கள் எதிர்பார்த்த அரசியல் கைதிகள், காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட உடனடி தேவைகளுக்கான தீர்வுகள் கூட கடந்த மூன்றரை வருட காலப் பகுதியில் இதுவரை எட்டப்படவில்லை.

இந் நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சுப் பதவியை பெறுப்பேற்றுள்ளேன்.

அதுமட்டுமன்றி நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதுடன் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட 11 கோரிக்கைகளை ஜனாதிபதியிடத்தில் முன் வைத்துள்ளதுடன், அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றேன்.

இதேவேளை இன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தின்போதும் பிரதமரிடத்தில் அக் கோரிக்கையினை நான் அவரிடம் வலியுறுத்தினேன்.

அதுமாத்திரமின்றி நீதியமைச்சருடனும் 10 நிமிடங்களுக்கு மேலாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயத்தினை எடுத்துரைத்துடன் நமல் ராஜபக்ஷவுடனும் மேற்படி கோரிக்கை சம்பந்தமாக வலியுறுத்தியுள்ளேன்.

ஆகவே மேற்கண்ட நோக்கத்திற்கமைவாகவே நாங்கள் ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டோம். ஆகவே அந்த நோக்கத்தினை நாம் நிறைவேற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts