இலங்கை புலோலி சினிமாசில் ஒலிக்கும் தேனிசை செல்லப்பா பாடல்கள்

இலங்கையின் வடமராட்சி பகுதியில் தற்போது கல்யாண மண்டபத்துடன் அழகாக எழுந்து நிற்கிறது புலோலி சினிமாஸ்.

திரையரங்கம் முற்றிலும் வெளிநாடுகளில் இருக்கும் திரையரங்குகள் போல சிறந்த இருக்கைகளுடன் தரமான முறையில் இருப்பதையும் நல்ல முறையில் படங்கள் காண்பிக்கப்படுவதையும் காண முடிந்தது.

எப்படியிருக்கிறது புலோலி சினிமா.. அங்கு மக்கள் எப்படி திரைப்படம் பார்க்க வருகிறார்கள் என்பதை அவதானிக்க சென்றிருந்தோம்.

சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா என்ற திரைப்படம் காண்பிக்கப்பட்டது. முதல் நாள் என்பதால் இரண்டாவது காட்சிக்கும் 21.30 மணி கூட்டம் அலை மோதியது.

சிறப்பாக பெண்கள் பிள்ளைகளுடன் அதிகமாக வந்திருந்தார்கள். அங்கு கவனிக்கக் கூடிய முக்கிய விடயமாக இருந்தது விடுதலைப்புலிகளுக்காக தேனிசை செல்லப்பா பாடிய பாடல்கள்தான்.

சினிமா படம் தொடங்க முன்னதாக தேனிசை செல்லப்பாவின் பாடல்களும், பிரபாகரன் பற்றி அவர் பாடிய பிரபல பாடல்களையும் போடுகிறார்கள்.

இலங்கையில் இந்த பாடல்களுக்கான தடைகள் தெரிந்தும் தெரியாதது போல தளர்வாக விடப்பட்டு வருவதை காண முடிகிறது.

ஒரு வேளை இவை ஒரு கணிப்பீடோ தெரியவில்லை. சீமாராஜா படம் மகா சொதப்பலாக இருந்தாலும் அதை சகித்துக்கொள்ளும் போக்கு இளைஞர்களிடையே இருந்தது.

சிவகார்த்திகேயனிடம் இதற்கு மேல் நாம் எதிர்பார்க்க முடியாது. அவரால் முடிந்தது இவ்வளவுதான் என்று அந்த இளைஞர் கூறினார்.

நான்கு பேர்கள் மோட்டார் சைக்கிளுடன் நின்றார்கள். கையில் நான்கு பார்சல்கள் இருந்தன. என்ன இது என்று வினவியபோது மட்டன் புரியாணி என்றார்கள். படம் பார்த்துவிட்டு அதை கடற்கரையில் நின்று சாப்பிட்டுவிட்டு வீடு போக இருப்பதாக சொன்னார்கள்.

பெண்கள் குடும்பத்துடன் மரியாதையாக படம் பார்த்து வெளியேறக்கூடிய பண்பாடு நிலவியதையும் அவதானிக்க முடிந்தது.

கழிப்பறைகள் சுத்தமாக இருந்தன, கன்ரீனும் சிறப்பாக இருந்தது. அந்தக்காலத்தில் பாசமலர் திரைப்படத்திற்கு மக்கள் வந்தது போன்ற காட்சிகள் தொடங்கவும் முடியவும் தெரிந்தது.

ஆனால் புலோலியில் இருப்பது போல யாழ்ப்பாணத்தில் இல்லை.

அனைத்தையும் அவதானித்து போகும் போது நள்ளிரவு 02.00 மணி வழியில் நமது மோட்டார் சைக்கிளை போலீஸ் மறித்தது. இந்திய பாணியில் திரைப்படத்தின் நுழைவுச் சீட்டை கொடுக்க பார்த்தார்கள். காலம் கெட்டுக்கிடக்கிறது கவனமாகப் போங்கள் என்றார்கள்.

கோப்பாயில் இந்த சம்பவம் நடந்தது பத்துப் போலீசார் மறித்தார்கள் அவர்களில் ஒருவர் தமிழ் பேசினார்.

யாழ்ப்பாணத்தில் சினிமா தொழில் முன்னேறி வருவதை காண முடிகிறது.

அலைகள் 02.10.2018

Related posts