தி.மு.க.வின் தலைவராக ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, திமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று இடம்பெற்றது.

பொதுக்குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகனால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பொதுக்குழுவில் பங்கேற்ற திமுக நிர்வாகிகள் கரகோசம் எழுப்பி, ஆரவாரம் செய்து அவ்வறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.

திமுக தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதை, பொதுக்குழுக்கூட்டம் நடைபெறும் அண்ணா அறிவாலயத்துக்கு வெளியே திரண்டு இருந்த ஏராளமான திமுக தொண்டர்கள் பட்டாசு கொழுத்தியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியுள்ளனர்.

திராவிட இயக்கத்தையும் அதன் கொள்கைகளையும் கருணாநிதி மீது ஆணையிட்டுக் காப்போம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

திமுகவின் தலைவராக கடந்த 1969 முதல் செயற்பட்டு வந்த, கலைஞர் கருணாநிதி, தனது 94 ஆவது வயதில், கடந்த ஓகஸ்ட் 07 ஆம் திகதி மரணிக்கும் வரை அக்கட்சியின் தலைவராக செயறபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிட கட்சியாக ஈ.வெ. இராமசாமியாகல் (தந்தை பெரியார்) ஆரம்பிக்க்பபட்ட கட்சியில் ஏற்பட்ட பிளவை அடுத்து, 1949 இல் சி.என். அண்ணாதுரையால் (அறிஞர் அண்ணா) திராவிட முன்னேற்றக் கழகமாக உருவெடுத்தது.

கறுப்பு சிவப்பு கொடியைக் கொண்ட இக்கட்சி 1967 இல் தமிழ் நாட்டின் மூன்றாவது சட்டமன்ற பொதுத்தேர்தலில் முதன் முதலில் வெற்றி பெற்று அறிஞர் அண்ணா தலைமையில் (பொதுச் செயலாளர்) தமிழ் நாட்டின் ஆட்சியை (06.03.1967 – 03.02.1969) கைப்பற்றியது. அதன் பின் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தலைவர் பதவி உருவாக்கப்பட்டதோடு, 1969 இல் முத்துவேல் கருணாநிதி தி.மு.க.வின் தலைமைப் பதவியை பொறுப்பேற்றதோடு, அன்றிலிருந்து அவர் மறையும் வரை அப்பதவியில் அவர் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டுமென தீர்மானம்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும், அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment