லால் சலாம் மக்களுக்கான அரசியலை பேசும்

ஐஸ்வர்யா இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்திருக்கும் படம் ‘லால் சலாம்’. மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படம், 9-ம் தேதி வெளியாக இருக்கிறது. படம் பற்றி ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் பேசினோம்.

‘லால் சலாம்’ அரசியல் கதைன்னு சொல்றாங்களே..?: ஆதார் கார்டு இருக்கிற எல்லாருக்குமே அரசியல்ல ஒரு பகுதி இருக்குன்னு நான் நம்பறேன். இந்தப் படம் ஒரு சின்ன அரசியலை, மக்களுக்கான அரசியலைப் பேசுது. அரசியலை தனியா எந்த விதத்துலயும் பேசலை. ஒரு ஊர்ல ஒரு கிரிக்கெட் டீமுக்கு, அரசியலால என்ன நடக்குது? அது ஊரை எப்படி பாதிக்குது, ரெண்டு குடும்பத்தை, ரெண்டு நண்பர்களை என்ன பண்ணுது? அப்படிங்கறது கதை. இந்தப் படம் யாருக்கும் எதிரான கருத்தை சொல்லலை.

ரஜினிகாந்தை வச்சு படம் பண்றது உங்க கனவா இருந்ததா? உங்க அப்பாங்கறதால இதுல நடிக்க அவர் சம்மதிச்சாரா?: இதைப் பற்றி ஏற்கெனவே நான் சொல்லியிருக்கேன். அவரை வச்சு படம் பண்றதுல எனக்கு விருப்பமே இல்லை. ஆனா, இந்தக் கதைக்கு அதுவா நடந்தது. சில ஸ்கிரிப்ட் ஸ்டாராங்கா இருந்தா, அதுவே அதுக்கான ஆட்களை இழுத்துக்கும்னு நினைக்கிறேன். இந்தப் படத்துக்குள்ள ஏ.ஆர்.ரஹ்மான் சார் வரணும்னு இருந்தது. ரஜினி சார் வரணும்னு இருந்தது. 30 வருஷத்துக்கு பிறகு ஜீவிதா மேடம் வரணும்னு இருந்தது. சில விஷயங்கள்தான் நம்ம பிளான் பண்ண முடியும். சிலது தானா நடக்கும். அப்படித்தான் இதுல நடந்தது. அப்பா இதுக்குள்ள வந்ததுக்கு கதைதான் காரணம்.

ரஜினிகாந்த் இதுல இஸ்லாமியரா நடிச்சருக்கார்: ஆமா. இந்தக் கதையில அதுக்கான காரணம் இருந்தது. அவர் சொல்ல வேண்டிய கருத்து அழுத்தமா இருந்தது. அவர் சொன்னா, இன்னும் அதிகமானவர்கள்கிட்ட அந்தக் கருத்துச் சேரும் அப்படிங்கறதால அவர் இந்த கேரக்டரை பண்ணியிருக்கார்.

படத்துல என்ன மெசேஜ் சொல்றீங்க?: எல்லாருக்குமான ஒரு மெசேஜை படம் பேசும். நாங்க இந்தப் படத்துல சொல்ற கருத்துதான் எல்லாருக்குள்ளயும் ஆழமா இருக்கு. ஆனா, அது ஏன் வெளிப்பட மாட்டேங்குது அப்படிங்கற விஷயம் கேள்வியா இருக்கு. பட ரிலீஸுக்கு பிறகு அது வெளிப்பட்டால் எனக்கு மகிழ்ச்சிதான்.

நீங்க இதுக்கு முன் இயக்கிய 2 படங்களுமே வேற வேற ஜானர் படங்கள். இதுல அரசியல் கதையை தேர்வு பண்ண என்ன காரணம்?: இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட் ரைட்டர் விஷ்ணு. அவர் எங்கிட்ட ரெண்டு கதை சொன்னார். ஒன்னு கமர்ஷியல் லவ் ஸ்டோரியா இருந்தது. இன்னொன்னு இந்தக் கதை. காதல் கதை பண்ணியாச்சுங்கறதால புதுசா டிரை பண்ணலாம்னு இந்தக் கதையைத் தேர்வு பண்ணினேன். எனக்கு கிராமம் பற்றி அதிகம் தெரியாது. அதனால இந்தப் படம் எனக்கு சவாலாகத்தான் இருந்தது.

முதல்ல நீங்க இந்தி படம் பண்றதா இருந்தது. அதை விட்டுட்டு இந்தப் படத்துக்கு வந்ததுக்கு ஏதும் காரணம் உண்டா?: அது கிரிக்கெட் வீரர் கங்குலியோட பயோபிக். அதுக்கான ஆய்வுகள்ல இருந்தோம். அப்பதான் இந்தக் கதை வந்தது. இரண்டுமே கிரிக்கெட் பற்றிய கதையா இருந்ததால, நான் இதை தேர்வு பண்ணினேன்.

ரஜினிகாந்த் அதிக அனுபவமுள்ள நடிகர். படப்பிடிப்புல அவரை டைரக்ட் பண்ணிய அனுபவம் எப்படி இருந்தது?: இந்தப் படத்துல ஹீரோங்கறது, அப்பாவும் இல்லை, நானும் இல்லை, விஷ்ணு விஷாலும் இல்லை. கதைதான் இந்தப் படத்தோட ஹீரோன்னு நான் சொல்வேன். அதுக்கு கட்டுப்பட்டு, கதைக்குள்ளதான், அப்பா உட்பட எல்லாருமே இருந்தாங்க. இருந்தாலும் இந்த விஷயத்தை நானே சொன்னா நல்லாயிருக்காது, இருந்தாலும் சொல்லணும். அவரை போல ‘டெடிகேட்டிவ்’ நடிகரை பார்க்க முடியாது.

இந்தப் படத்தோட பாடல் வெளியீட்டுல நீங்க பேசிய சங்கிங்கற விஷயம் பெரிய விவாதமா மாறிச்சு: இந்தப் பட ரிலிஸுக்கு பிறகு பெரிய விவாதமா மாறுமா?: அந்த விழாவில என் கருத்தை நான் வெளிப் படுத்தினேன். அவ்வளவுதான். அதுக்கான விளக்கத்தையும் அப்பா சொல்லிட்டார். அதைத் தொடர்ந்து பேசறதுக்கு எங்கிட்ட எதுவும் இல்லை” என்றார்.

Related posts