ஐ.தே.க. – பொதுஜன பெரமுன கூட்டணி சவால் இல்லை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசிய கட்சியும் ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ளன. ஆனால் இவ்விரு கட்சிகளும் பலவீனமடைந்த நிலையிலேயே உள்ளன. எனவே இவை ஒருபோதும் எமக்கு சவாலான கட்சிகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மக்களே காணப்பட வேண்டும். கடந்த காலங்களில் மக்களின் தவறான தீர்மானங்களால் தவறான தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றனர். எனவே, இனிவரும் காலங்களில் மக்கள் சரியான தீர்மானத்தை எடுத்தால், நாம் அவர்களுடன் இருப்போம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசிய கட்சியும் ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ளன. பொதுஜன பெரமுனவால் தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரே தற்போதைய ஜனாதிபதியாக உள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி மிகவும் பலவீனமடைந்த நிலைமையிலேயே உள்ளது. எனவே இந்த கூட்டணி எமக்கு பாரிய சவாலாக அமையப்போவதில்லை.

மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப கட்சி முறையாக செயற்பட்டால் யார் யாருடன் கூட்டணி அமைத்தாலும் நாம் அச்சப்படத் தேவையில்லை. எமது நாட்டுக்கென கலாசாரமும் ஒழுக்கமும் காணப்படுகிறது. அவற்றுக்கு ஏற்பவே செயற்பட வேண்டும்.

யுக்திய என்ற பெயரில் பதில் பொலிஸ்மா அதிபரால் நாடகம் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு செயற்படுவதால் பாதாள உலகக் குழுவினரையும் கட்டுப்படுத்த முடியாது. போதைப்பொருளையும் அழிக்க முடியாது என்றார்.

Related posts