சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்று வரும் அயலாக தமிழர் மாநாட்டு நிகழ்வில், இன்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ் மஸ்தான், அயலக்ஸ் தமிழர் நல வாரியம் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி, பொது மற்றும் மறுவாழ்வு துறை அரசு செயலாளர் க. நந்தகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

——-

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டில் பல்வேறு ஏமாற்று வெளிநாட்டு தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டும் இலங்கைக்கு வந்தும் Online கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி அதிக வட்டி அறவிட்டு வருகின்றனர். இதில் பிணையாளர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. கடனை ஓரிரு நாட்களில் கட்டவில்லை என்றால் சமூக வலைதளங்களை பயன்படுத்தி மிரட்டி அவமானப்படுத்தும் செயல் நடந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (12) பாராளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்தார்.

இது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருக்கு தெரியப்படுத்திய போது,இதில் சட்ட சிக்கல் இருப்பதால் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதாக தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் இந்தக் கடன் வலையில் சிக்கியுள்ள தரப்பினரோடு சுமார் 2 மணிநேரம் கலந்துரையாடியதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி இந்த பெரும் கடன் வழங்குநர்கள் தொடர்பில் ஆராய வேண்டும்.300 சதவீத வட்டி அறவிட்டு வருகின்றனர்.கடனை செலுத்துவதில் ஒரு நாள் தாமதித்தால், தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், குடும்ப புகைப்படங்களை ஆபாசமான படங்களுடன் எடிட் செய்து சமூக ஊடகங்கள் மூலம் அவமானப்படுத்தி வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வெளிக்கொணர்ந்தார்.

புதிய சட்டங்களை கொண்டு வரும்போது, ​​இதுபோன்ற ஏமாற்று மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தடுக்க வேண்டும்.தவறான விசா நிபந்தனைகளில் அவர்கள் இருப்பது கண்டறியப்பட்டால்,
அவர்கள் நாட்டிலிருந்து திருப்பி அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர்,

இவ்வாறான மோசடியான தொழில்களில் கடன் பெற்றவர்கள் குறித்த கடனை செலுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, Online கடன் பெற்று பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து தாம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தனர்.இச் சந்திப்பின் விளைவாக பாதிக்கப்பட்டவர்களும் மத்திய வங்கி ஆளுநருக்குமிடையில் கலந்துரையாடலுக்கான ஏற்பாட்டையும் எதிர்க்கட்சித் தலைவர் மேற்கொண்டிருந்தார்.

நுண்நிதி கடன் பொறிகளில் இருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் கிராமிய வங்கியின் கருத்தாக்கமாக பங்களாதேஷில் உருவாக்கப்பட்ட நுண் கடன் வங்கிக் கட்டமைப்பானது பெண்களை மையமாகக் கொண்டு மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.ஜனசவிய வேலைத்திட்டத்திலும்,முன்னாள் ஹம்பாந்தோட்டை மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த மித்ரரத்ன என்ற நபர் கிராமிய வங்கிகளைப் போன்று பெண்களை மையப்படுத்தி ஜனசக்தி வங்கிகளை மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்.

இது முழுக்க முழுக்க பெண்கள் தலைமையிலான குடும்ப அலகுகளைக் கொண்ட திட்டம் என்பதோடு,வறுமையை ஒழிப்பதே நோக்கமாக இருந்தாலும்,பல்வேறு நபர்கள் அப்பாவி மக்களுக்குப் பணத்தைக் கொடுத்து விட்டு,மிகவும் நலிந்த பிரிவினரைக் குறிவைத்து அதை வியாபாரமாக உருவாக்கி தற்போது பெரும் கடன் பொறியை உருவாக்கியுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சில வர்த்தகர்கள் இந்த எண்ணக்கருவை வணிகமாக மாற்றியுள்ளனர்.கடன் கொடுத்து, அதிக வட்டி அறவிட்டு,கடனை செலுத்த முடியாமால் போகும் போது கடனை இன்னும் அதிக சுமையாக மாற்றி அறவிட்டு வருகின்றனர்.சிறந்ததொரு எண்ணக்கரு அழிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் மங்கள சமரவீர இது தொடர்பில் கவனத்தை செலுத்தி, குறிப்பிட்ட அளவு நுண் நிதிக் கடனில் இருந்து விடுபட,வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகளை மேற்கொண்டார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது தற்போது கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது.இதற்கு,தனிச் சட்டங்களைக் கொண்டு வந்து,நுண் நிதி கடன் வழங்கும் நிறுவனங்களை தெளிவான ஒழுங்குமுறைக்குள் கொண்டு வர வேண்டும். இந்த பெறுமானம் மிக்க எண்ணக்கருவை அதிக இலாபமீட்டும் ஒன்றாக மாற்றுவதை தவிர்க்கவும்.நுண் கடன்களில் சிக்கித் தவிக்கும் மக்களை அதிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் இன்று (12) இடம்பெற்ற நுண் நிதி கடன் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

——

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிகளில் பட்டம் விடும் பருவ காலம் இடம்பெற்று வரும் நிலையில் பலரும் பட்டம் விட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
பல விதமான பட்டங்களை கட்டி வானில் பறக்கவிட்டு மகிழும் இளைஞர்கள் , சில வேளைகளில் தாமும் பட்டத்துடன் பல அடி உயரங்களுக்கு பறந்து ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை தைப்பொங்கல் தினத்தன்று , வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் மாபெரும் பட்ட திருவிழா நடைபெற்றது. அதன் போது முப்பரிமாண பட்டங்கள் பல பறக்க விடப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் பட்டத்தின் கயிற்றில் ஏறி வானத்தை நோக்கி சென்ற இளைஞன் ஒருவரின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
யாழ்ப்பாணம் – தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெரிய பட்டம் பறக்கப் பயன்படும் கயிற்றில் ஏறி சுமார் 30 அடி உயரத்தில் ஏறி புகைப்படம் எடுத்துள்ளார்.
பட்டத்தின் கயிற்றில் ஏறிய இளைஞன் மீண்டும் கீழே வரமுடியாமல் அசௌகரியத்தில் இருந்ததாகவும் பின்னர் கடின முயற்சியின் பின்னர் காப்பாற்றப்பட்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பட்டத்துடன் தாமும் சேர்ந்து பறக்கும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் பலர் மகிழ்ந்து வரும் நிலையில் , இவ்வாறான ஆபத்தான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என பலரும் அந்த காணொளிக்கு கருத்திட்டு வருகின்றனர். இதற்கு முன் 2021ஆம் ஆண்டு, பெரிய பட்டத்தை பறக்க விட சென்ற இளைஞன் ஒருவர் கயிற்றில் தொங்கி சுமார் 100 அடி உயரத்தில் உயிர்தப்பிய சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts