ரூ.1700 சம்பள உயர்வால் தொழிலாளர்கள் வெற்றி கொண்டாட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு மற்றும் மேலதிகமாக கொய்யப்படும் பச்சை இலை கொழுந்து கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய் கொடுப்பனவுடன் கூடிய சம்பள உயர்வுக்கு வெற்றி கொண்டாட்டங்கள் நுவரெலியா, கந்தப்பளை, இராகலை பிரதேச தோட்டங்களில் தொழிலாளர்களால் இன்று (02) காலை கொண்டாடப்பட்டது.

காலை வேளையில் வழமையான தொழிலுக்கு சென்ற தொழிலாளர்கள் தோட்ட ஆலையங்கள், தொழிற்சாலைகள்,கொழுந்து நிறுவையிடும் இடங்கள், மலைக் கோயில்கள் ஆகியவற்றில் விசேட பூசைகள் செய்தும், பாற்சோர் சமைத்து, பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதேசந்தர்ப்பத்தில் இந்த சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் உருவப்படத்திற்கு மாலையிட்டு விசேட பூசைகளை செய்ததை அவதானிக்ககூடியதாக இருந்தது.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், மனுச நானயக்கார உள்ளிட்ட அரசாங்கத்திற்கும் இதன்போது தோட்ட தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வுகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாநில பிரதநிதி எஸ்.ரமேஸ்,சிரேஸ்ட மகளிர் அணி அதிகாரி எஸ்.கௌரி,மாவட்ட தலைவர் ஆ.கிருஸ்ணகுமார் ஆகியோருடன் தொழிலாளர்களும் கலந்துக்கொண்டனர்.

Related posts