ரிப்பப்பரி: திரை விமர்சனம்

கோவை அருகேயுள்ள ஒரு கிராமத்தில், பாக்யராஜ் (நோபிள் கே ஜேம்ஸ்), பாண்டியராஜ் (மாரி) ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து யூடியூபில் சமையல் சேனல் நடத்துகிறார் சத்யராஜ் (மகேந்திரன்). தனது வீடியோக்களின் தீவிர ரசிகை ஒருவரைப் பார்க்காமலே காதலிக்கவும் செய்கிறார். இதற்கிடையில் சாதி மாறிக் காதலித்துத் திருமணம் செய்துகொள்பவர்களில், ஆண்களின் தலையை மட்டும் கொய்து போடுகிறது ஒரு பேய். சத்யராஜின் நண்பனும் அந்தப் பேய்க்குப் பலியாக, அதன் பின்னணியைத் துப்பறிந்து போலீஸுக்குச் சொல்ல வேண்டிய கட்டாயம் உருவாகிறது.

சத்யராஜ், அந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா, பேயையும் காதலியையும் சந்தித்தாரா என்பது மீதிக் கதை.

கிராமத்துப் பின்னணியில் ஹாரர் காமெடியாகத் தொடங்கும் படம், க்ரைம் த்ரில்லராக உருமாறி, பின்னர் சாதிக்கு எதிராகச் சமூகத்துக்குச் செய்தி சொல்லிக்கொண்டே மீண்டும் ஹாரர் காமெடியாக, தொடங்கிய இடத்துக்கு வந்து முடிகிறது. தொய்வில்லாத திரைக்கதை, விரசமற்ற நகைச்சுவை, பேய்க்கான அழுத்தமான ‘ப்ளாஷ் பேக்’, பேயைச் சித்தரித்த விதம் என இறுதிவரை பார்வையாளர்களைத் தனது கைப்பிடியிலேயே வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் அருண் கார்த்திக்.

பேய் அருகில் இருந்தால் டமாரம் அடிக்கும் போலீஸ் நாய் ஒன்றின் ஆவி அடைக்கப்பட்ட குரங்கு பொம்மை உட்பட லாஜிக் பற்றிய கவலையின்றி ரசிக்கும்படி பலவிதங்களில் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார்கள். பேயின் தோற்றம், நடமாட்டம் ஆகியவற்றைச் சித்தரித்த வகையில் ‘ஐ-மெட்டா மீடியா’ குழுவின் பங்களிப்பு தரமான சம்பவமாகப் பரவியிருக்கிறது.

சத்யராஜாக நடித்துள்ள மகேந்திரன், அவர் நண்பர்கள், காவல் ஆய்வாளராக வருபவர், பேயாக நடித்திருப்பவர், நாயகிகளாக வரும் ஆரத்தி, காவ்யா அறிவுமணி என அத்தனை பேரும் கதைக் களத்தின் மனிதர்களாக வந்து கவர்கிறார்கள்.

ஹாரர் காட்சிகளைக்கூட கொண்டாட்டமான மனநிலையுடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் தளபதி ரத்னம். திரைக்கதையின் ‘ஜிக் ஜாக்’ பயணத்துக்கு ஏற்ப, உணர்வு குன்றாத பாடல்கள், இறைச்சல் இல்லாத பின்னணி இசை என அசத்தலான பங்களிப்பை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் திவாகரா தியாகராஜன்.

இதுவரையில் தமிழ் சினிமாவில் வந்திருக்கும் ஹாரர் நகைச்சுவைப் படங்களில் ஒரு வீடு, அல்லது பயன்பாடற்றக் கட்டிடம் ஆகியவற்றில் வசிக்கும் பேய்களிடம் சிக்கிக்கொள்ளும் கதாபாத்திரங்கள் என்கிற சட்டகத்தை நம்பாமல், சாதி ஆணவத்தைக் கைவிடாத கிராமம், அதைச் சுற்றிய பகுதிகள் என கதைக்களத்தை அமைத்துக் காட்சிகளை அமைத்திருப்பது படத்தை ரசிக்கத் தூண்டுகிறது.

Related posts