பலாலி – சென்னை விமான சேவை இன்று ஆரம்பம் !

பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான வாராந்த விமான சேவை இன்று முதல் ஆரம்பமானது. அதற்கமைய யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதலாவதாக பயணிக்கும் எயார் இந்தியா நிறுவனத்தின் AL 9 102 பயணிகள் விமானம் இன்று இந்தியாவின் சென்னை நகரத்திற்கு பயணமானது.

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான வாராந்த விமான சேவை ஆரம்பமானது தொடர்பில் இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சஞ்சீவ விஜயரத்ன விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

எயார் இந்தியாவின் உப நிறுவனமான அலையன்ஸ் எயார் யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவையை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. இது இலங்கை விமான சேவைகள் வரலாற்றில் முக்கிய மைல் கல்லாகும். அத்துடன் உள்ளுர் தனியார் விமான சேவையான பிட்ஸ் எயார் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கும் திருச்சிக்கும் விமான சேவையை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து பல பிரயாணிகள் யாத்திரைக்காக இந்தியா சென்று வருகின்றனர். அத்துடன் அதிக எண்ணிக்கையிலான இந்திய உல்லாச பயணிகள் இலங்கை வருகின்றனர். இது இலங்கையின் பொருளாதாரத்தை பெருமளவு ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது. பலாலிக்கும் தென்னிந்திய விமான நிலையங்களான சென்னை மற்றும் திருச்சிக்கான விமான கட்டணங்கள் 50 சத வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் வழிநடத்தலின் பேரில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் பலாலியில் அமைந்துள்ள யாழப்பாண சர்வதேச விமான நிலையத்தின் மேலதிக அபிவிருத்தி பணிகளுக்காக ஒரு பில்லியன் ரூபா செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முதலாவது விமான சேவையில் வட மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் கலந்து கொண்டார். இதன் போது ‘ இரு நாடுகளுக்குமிடையில் புதிய உறவுகளையும் புதிய வர்த்தக தொடர்புகளையும் இந்த விமான நிலையத்தினூடாக உருவாக்கமுடியும் என்று எதிர்பார்ப்பதாக ‘ ஆளுநர் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts