ரூ.120 கோடி மோசடி: ஐங்கரன் கருணாமூர்த்தியை கைது செய்யக்கோரி லைகா..!

ஐங்கரன் கருணாமூர்த்தியின் நிதி மோசடி, ரொக்கப் பணக் கையாடல் மூலம் லைகா நிறுவனத்துக்கு ரூ.120 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) புகார் மனு அளிக்கப்பட்டது.

லைகா நிறுவனர் நீலகண்ட் நாராயண்பூர் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
லைகா நிறுவனம் திரைப்பட்ட தயாரிப்பு மற்றும் விநியோகங்களில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தில் ஆலோசகராகப் பணிபுரிந்த ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர் கருணாமூர்த்தி மற்றும் அவரது உதவியாளர் பானு மீதே லைகா நிறுவனம் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளது.

ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தியும் அவரது உதவியாளர் பானுவும் இணைந்து லைகா நிறுவனத்துக்கு ரூ.120 கோடி நஷ்டம் ஏற்படுத்தியுள்ளனர். லைகா நிறுவனத்தின் ஆலோசகராக ஐங்கரன் கருணாமூர்த்தி கடந்த 2014-ல் இணைந்தார். அவர் ஓர் இலங்கைத் தமிழர், பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்.
ஏற்கெனவே சினிமா தயாரிப்பில் அனுபவம் உள்ளவர் என்பதால் அவர் மீது லைகா பெருமதிப்பும் முழு நம்பிக்கையும் கொண்டிருந்தது. லைகா நிறுவனத்துக்காக கதை கேட்பது, கதையை உறுதி செய்வது, நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களை முடிவு செய்வது. அவர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பது என அனைத்துப் பணிகளையும் கருணாமூர்த்தி செய்துவந்தார். அவருக்கு பானு உதவியாக இருந்தார்.
நிதி மேலாண்மை பொறுப்பு முழுவதுமாக நம்பிக்கையின் அடிப்படையில் கருணாமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருடைய கையெழுத்து இருந்தால்தான் எந்த ஒரு காசோலையும் செல்லுபடியாகும். அந்த அளவுக்கு அவருக்கு லைகா நிறுவனம் அதிகாரம் கொடுத்திருந்தது.

ஆனால் கருணாமூர்த்தி கடந்த 2 ஆண்டுகளாகவே லைகாவின் நம்பிக்கையைச் சிதைத்து வருகிறார். சாட்டிலைட் உரிமைகளில் நிதி மோசடி, ஓவர்சீஸ் உரிமையில் மோசடி, ரொக்கப் பணம் கையாடல் என ஈடுபட்டு வந்துள்ளார். அவருக்கு உதவியாளர் பானு உடந்தையாக இருந்துள்ளார்.

அலுவலகத்தில் கருணாமூர்த்தி இல்லாதபோது பானுதான் எல்லாம் என்ற உத்தரவை அவர் போட்டிருந்ததால் பானு லைகா தனது சொந்த நிறுவனம் என்ற நினைப்பில் ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.

2014-ல் ‘கத்தி’ படத்தின் சேட்டிலைட் விற்பனையில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இதேபோல் 2018-ல் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம் ரூ.14 கோடி நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார்.

‘இந்தியன் 2’ படத்தின் மூலமாகவும் ரூ.4 கோடி நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார்.
‘இப்படை வெல்லும்’, ‘தியா’, ‘கோலமாவு கோகிலா’ ஆகிய படங்களில் நிறுவனத்தின் நன்மையைக் கருத்தில் கொள்ளாமல் பணத்தை சூறையாடியுள்ளார்.

சேட்டிலைட் உரிமைகள் விற்றது, ஓவர்சீஸ் ரைட்ஸ் வகையில் ரூ.90 கோடி வரை மோசடி செய்துள்ளார். இவற்றையெல்லாம் பற்றிக் கேட்டபோதுதான் 2019 ஆகஸ்ட் 7-ல் எழுத்துபூர்வமாக ஓர் ஒப்புதல் அளித்தார். அதில் 12 மாதங்களுக்குள் ரூ.13,51,10,800 லைகாவுக்கு திருப்பித் தருவதாகக் கூறினார்.

இதுதவிர 2019 மார்ச் 17-ம் தேதி முதல் ஜூன் 4 வரை லீலா வென்சூர்ஸ் ஓட்டலில் தங்கியதன் மூலம் ரூ.42,20,334 நிறுவனத்துக்கு செலவு ஏற்படுத்தியுள்ளார். ரொக்கப் பணமாக அவ்வப்போது வாங்கிய ரூ.14,15,000 மற்றும் ரூ.13,27,736 ஆகியவற்றிற்கு எந்த ரசீதும் அளிக்கவில்லை.

வெளிநாட்டுப் பயணங்கள் ரீதியாக ரூ.1,26,89,342 செலவாகியுள்ளது. எப்போதும் விமானத்தில் பிசினஸ் க்ளாஸில்தான் செல்வார். மேலும் அவருக்கு நெருக்கமான கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.25 கோடி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்திலும் பானு உடந்தையாக இருந்துள்ளார். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து லைக்கா நிறுவனம் இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐங்கரன் கருணாமூர்த்தியையும் அவரின் உதவியாளர் பானுவையும் கைது செய்யக் கோரியுள்ளதாக லைகாவின் வழக்கறிஞர் நிருபர்களிடம் தெரிவித்தார். கருணாமூர்த்தி மீது நடவடிக்கை எடுப்பதாகக் காவல்துறை உறுதியளித்துள்ளதாகவும் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புகார் தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐங்கரன் இன்டர்நேஷனல்கமிஷனரிடம் மனுரூ.120 மோசடிலைக்கா நிறுவனம்

Related posts