அன்று ராகுல், இன்று விஜய் ?

அட்லி இயக்கத்தில் விஜய்-நயன்தாரா நடித்துள்ள பிகில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

இந்த விழாவில், பேசிய நடிகர் விஜய் தமிழக அரசை தாக்கி பேசியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நடிகர் விஜய்யின் பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி வழங்கியதற்காக தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதில், கல்லூரி வளாகத்தில் அரசியல் நிகழ்ச்சிகள் நடப்பதற்கு அனுமதி அளித்தது விதிமுறைகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டிருக்கிறார். இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும்.

விஜயின் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்திற்கு வெளியே அமைக்கப்பட்ட அரங்கத்தில்தான் நடைபெற்றிருக்கிறது. பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், அரங்கத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் உரையாற்றியதில் சில கருத்துகள் ஆளும் அ.தி.மு.க-வினருக்கு எதிராகப் பேசியதாக தவறாகப் புரிந்துகொண்டு இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஏவி விடப்பட்டிருக்கிறது.

இதன்மூலம், பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி வழங்கியதற்காக மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டு, அச்சுறுத்தலுக்கு கல்லூரி நிர்வாகம் இரையாக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு அரசியல் நிகழ்ச்சி அல்ல. கலைத்துறை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியாகும். எனவே, இதைவிட ஜனநாயக விரோத, பாசிச நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

கடந்த காலங்களில், சென்னை சட்டக்கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாக்களில் மாணவர் சங்க அழைப்பின் பேரில் காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் என இன்னும் பல அரசியல் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றியிருக்கிறார்கள். இதைப் போல தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நடைபெறுகிற விழாக்களிலே அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கலந்துகொள்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை எதிர்த்து யாரும் குற்றம், குறை கூறியதில்லை. இதை அனுமதித்த கல்லூரி நிர்வாகத்தினருக்கு எந்த அரசும் நோட்டீஸ் அனுப்பி மிரட்டியது கிடையாது. ஜனநாயகத்தில் இத்தகைய நடைமுறைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய், எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். எந்த அரசியல் கட்சியையும் ஆதரித்தவர் அல்ல. மாறாக, தமிழகத்தில் இருக்கிற லட்சக்கணக்கான இளைஞர்களால் ஈர்க்கப்பட்டு, போற்றப்படுகிற அற்புதமான ஓர் இளம் கலைஞர்.

இசை வெளியீட்டு விழாவில், அவரது உரையில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிட்டு அவர் பேசவில்லை. அவர் பொதுவாகப் பேசியதை ஆளும் அ.தி.மு.க-வினருக்கு எதிராகப் பேசியதாக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கற்பனையாகப் புரிந்து கொண்டு, நடிகர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார்.

‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பது போல, எதைக் கண்டாலும் அஞ்சுகிற நிலையில் அ.தி.மு.க-வினர் இருக்கிறார்கள்.

கடந்த பொதுத்தேர்தலுக்கு முன், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாணவிகளிடையே உரையாற்ற அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு எதிராக, இதே தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது. அன்று இச்செயலை அனைத்து எதிர்கட்சிகளும் வன்மையாகக் கண்டித்தன. அதேபோல, இன்றைக்கு நடிகர் விஜய் பங்கேற்ற இசை வெளியீட்டு விழா நடத்த அனுமதித்ததற்காக, தனியார் பொறியியல் கல்லூரிக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை வழங்கிய நோட்டீஸை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அப்படி திரும்பப் பெறவில்லை எனில், கடும் விளைவுகளை தமிழக ஆட்சியாளர்கள் சந்திக்க நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கிறேன்” என கூறி உள்ளார்.

Related posts