நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் சீமான்

சென்னை நிருபர்கள் சங்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆகஸ்டு 30-ந் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக கொண்டாடப்படுகிறது. எங்களை பொறுத்தவரையில் இதனை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக பார்க்கிறோம். ஈழத்தில் 2009-ம் ஆண்டு போர் முடிவுக்கு பின் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சரண் அடைந்தனர். இவர்கள் யாருடைய நிலைமையும் இப்போது என்ன என்று தெரியவில்லை. காணாமல் போன தங்கள் உறவுகளுக்காக ஈழத்தில் தமிழர்கள் மிகப்பெரிய பேரணி நடத்துகிறார்கள். அந்த பேரணியின் நோக்கம் வெற்றிபெறுவதை வலியுறுத்தி தமிழகத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கிறோம்.

முதல்-அமைச்சரை விட்டு கொடுக்க முடியாது

என் மண்ணின் முதல்-அமைச்சர் உடை அணிவதை நான் எப்படி இழிவாக பார்க்க முடியும்? வேலையில்லாமல் சமூக வலைத்தளத்தில் பதிவிடுபவர்கள் தான் கேலி செய்வார்கள். லண்டனில் குளிர் தாங்காமல் அவர் அந்த உடையை (கோட்டு) அணிந்து இருக்கிறார். பெருந்தலைவர் காமராஜர் ரஷியா சென்றபோது வேட்டிச்சட்டையோடு சென்றார். அது இன்னும் எங்களுக்கு பெருமையாக இருந்தது.

இதில் எல்லாம் முதல்-அமைச்சரை விட்டு கொடுத்துவிட முடியாது. கேலி பேசுபவர்கள் எல்லாவற்றுக்கும் கேலி பேசுவார்கள். அவர் வேட்டி சட்டை அணிந்து சென்றாலும் கேலி பேசியிருப்பார்கள்.

விஜய் கட்சி தொடங்கினால் வரவேற்பேன்

சினிமாவில் ரஜினிக்கும், விஜய்க்கும் தான் தற்போது போட்டி நடந்து கொண்டு இருக்கிறது. ரஜினி அதிகபட்சமாக இன்னும் 4 படங்கள் நடிப்பார். அவர் போன பிறகு முதன்மை இடத்தில் விஜய் தான் இருப்பார்.

யார்? யாரோ அரசியலுக்கு வருகிறார்கள். விஜய்யும் வரட்டும். ஆனால், ரஜினிகாந்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. விஜய் என் தம்பி. அவர் கட்சி ஆரம்பித்தால் வரவேற்கிறேன். மக்கள் எனக்கு வாக்களிக்காமல், அவருக்கு வாக்களித்தால் பாராட்டு. அவருக்கு வாக்களிக்காமல் எனக்கு வாக்களித்தால் நன்றி. அவ்வளவு தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் கலைக்கோட்டு உதயம், ராவணன், அன்பு தென்னரசு, தடா சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Related posts