இன்றைய முக்கிய இலங்கை செய்திகள் 31..05..2019

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ண தேரர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியதீன் ஆகியோரை பதவி விலக்கும் வரையில் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் இன்று காலை அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

—-

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாசிமின் மடிக்கணினி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

அக்கரைப்பற்று பாலமுனை பிரதேசத்தில் உள்ள கலப்பு ஒன்றில் இருந்து அது மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.

——

நாளை (ஜுன் 01) முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் பஸன் ரத்நாயக்க தெரிவித்தார்.

சாதாரண சேவையில் பெற்றுக்கொள்ளும் கடவுச்சீட்டுக்கு இதுவரை காலமும் அறவிடப்பட்டு வந்த 3,000 ரூபா கட்டணம், தற்போது 3,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஒரு நாள் சேவையில் பெற்றுக்கொள்ளும் கடவுச்சீட்டுக்கு இதுவரை காலமும் 10,000 ரூபா கட்டணம் 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சாதாரண சேவையில் பெற்றுக்கொள்ளும் 16 வயதிற்கு கீழ்பட்டவர்களுக்கான கடவுச்சீட்டுக் கட்டணம் 2,000 ரூபாவிலிருந்து 2,500 ரூபாவாகும்.

அத்தோடு, ஒரு நாள் சேவையில் பெற்றுக்கொள்ளும் 16 வயதிற்கு கீழ்பட்டவர்களுக்கான கடவுச்சீட்டுக் கட்டணம் 5,000 ரூபாவிலிருந்து 7,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டை திருத்தம் செய்வதற்கான கட்டணம் 500 ரூபாவிலிருந்து 1,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

—–

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் புதுடில்லியில் இன்று (31) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது தடவை பதவிப்பிரமாண நிகழ்வு நேற்று (30) புதுடில்லி நகரின் ராஷ்டரபதி பவனில் மிக கோலாகலமாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள சென்றிருந்த நிலையிலேயே, இந்திய பிரதமருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இந்திய பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியினைப் பெற்று இரண்டாவது முறையாகவும் அந்நாட்டு பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Related posts