தூத்துக்குடி பணப் பட்டுவாடா : கனிமொழியும், தமிழிசையும்

ஸ்டெர்லைட் கலவரம், துப்பாக்கிச் சூடு சோகம் என்ற அடையாளத்தை எல்லாம் தாண்டி சமீபநாட்களாக தூத்துக்குடியின் அடையாளமாக கனிமொழியும், தமிழிசையும் மட்டும்தான் செய்திக்கான மூலமாக இருக்கின்றனர்.

அதிமுக சார்பில் கூட்டணிக் கட்சி பாஜகவின் தமிழிசை, திமுக சார்பில் கனிமொழி, அமமுக சார்பில் டாக்டர் புவனேஸ்வரன். ஸ்டெர்லைட் பிரச்சினை மட்டும்தான் திமுகவின் துருப்புச் சீட்டு. அது கச்சிதமாகp பலனளித்திருக்கிறது. அதனாலேயே பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்றும்கூட வெற்றி வாய்ப்பு திமுக வேட்பாளர் கனிமொழிக்கே அதிகமாக இருக்கிறது.

தொடங்கிய இடத்திலேயே முடிக்கும் வைகோ…

இறுதி நாளான இன்று கனிமொழி ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், எட்டயபுரம் பகுதிகளில் பிரச்சாரம் செய்துவிட்டு கோவில்பட்டியில் பிரச்சாரத்தை முடிக்கிறார். கோவில்பட்டியில் வைகோ உரையுடன் கனிமொழியின் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.

வைகோ 2019 தேர்தல் பிரச்சாரத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் தான் தொடங்கினார். இன்று தனது பிரச்சாரத்தை தூத்துக்குடியிலேயே நிறைவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிசையின் பிரச்சாரம் தூத்துக்குடி டவுனில் அண்ணாநகரில் நிறைவு பெறுகிறது.

நட்சத்திரப் பேச்சாளர்கள், விஐபி வருகைகள் பலே..

தூத்துக்குடியில் தமிழிசைக்காக நடிகர் கார்த்திக், சரத்குமார் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். அமமுகவுக்காக சி.ஆர்.சரஸ்வதி பிரச்சாரம் செய்தார். மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் நேரில் வந்து சென்றார்.

இவர்களைத் தவிர தமிழிசைக்காக அமித் ஷா, பியூஷ் கோயல், தமிழக முதல்வர், துணை முதல்வர், தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா என்று விஐபிக்கள் வருகை களை கட்டியது.

கனிமொழியும் திமுகவும் மட்டும் சளைத்ததா என்ன என்ற அளவில் ஸ்டாலின், வைகோ, கே.எஸ்.அழகிரி, சீதாராம் யெச்சூரி, முத்தரசன், காதர் மொய்தீன் என கூட்டணிக் கட்சி பிரமுகர்கள் தேசிய முகங்கள் வந்து சென்றன.

படு ஜோர் பணப் பட்டுவாடா..

என்னதான் களத்தில் வியர்க்க விறுவிறுக்க தொண்டை தண்ணீர் வற்ற பிரச்சாரம் செய்தாலும் ஓட்டுக்கு எவ்வளவாம் என்ற மக்களின் குரல் ஓயாததால் இரண்டு கட்சிகளுமே பணப் பட்டுவாடாவை படுஜோராக செய்கின்றன என்பதே கள நிலவரம். வெற்றி உறுதியாகிவிட்டதால் திமுக ரூ.300-ம் பாஜகவுக்காக அதிமுக ரூ.500-ம் கொடுக்கின்றனவாம்.

ஆனால், ரூ.200 அதிகம் கொடுப்பதால் வாக்குகளின் போக்கை மாற்றிவிட முடியாது என்பதே கள நிலவரம். கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.2.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் பணப் பட்டுவாடாவுக்கு கொண்டுவரப்பட்டவை என்றே தெரிகிறது.

நெல்லை, தென்காசி போலத்தான் இங்கும் அமமுக புறந்தள்ளிவிட முடியாத சக்தியாக நிற்கிறது. அமமுக பிரிக்கும் வாக்குகள் பாஜகவுக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே இறுதிக்கட்ட நிலவரம். ஸ்ரீவைகுண்டம், கயத்தாறு பகுதிகளில் சாதி வாக்குகள் புவனேஸ்குமாருக்குப் பலமாக இருக்கின்றன. எப்படியும் குறைந்தது 1 லட்சம் வாக்குகள் வரை இவர் பிரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Related posts