ஓவியாவை கட்சியில் சேர அழைத்த அரசியல்வாதிகள்

தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி விவகாரங்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்னொருபக்கம் தங்கள் கட்சியின் பிரசாரத்திற்கு பயன்படுத்த பிரபல நடிகர், நடிகைகளை இழுக்கும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. நடிகை ஓவியா சமீபகாலமாக நடிகர் ஆரவுடன் இணைத்து காதல் கிசுகிசுவில் பரபரத்துக்கொண்டிருக்கிறார். தற்போது, 90 எம் எல் என்ற ஏ படத்திலும் நடித்திருக்கிறார். அனிதா உதீப் இயக்கி உள்ளார். இப்படம்பற்றி ஓவியா பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது: ஆணாதிக்கத்திலிருந்து விடுபட்டு பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற மைய கருவை வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. பெண் இயக்குனர் அனிதா என்னிடம் இக்கதையை சொன்னபோது உடனே ஏற்றுக்கொண்டேன். இதில் வசனங்கள் டபுள் மீனிங்கில் இருப்பதாகவும், புகைப்பிடிப்பது, மது அருந்துவதுபோன்ற காட்சிகளில் நான் நடித்திருப்பதை விமர்சித்தும் வருகிறார்கள்.

இந்த பழக்கமெல்லாம் என்னுடைய பர்சனல் பழக்கம் கிடையாது. படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரம் செய்யும் செயல். அதனால்தான் இப்படத்தை வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்த்தால்போதும் என்று கூறி வருகிறேன். மீண்டும் இதுபோல் நடிப்பீர்களா என்கிறார்கள். படத்துக்கு படம் மாறுபட்ட வேடங்களை எதிர்பார்க்கிறேன். அது ஹீரோயினாக இருந்தாலும் சரி, வில்லியாக இருந்தாலும் சரி.

அரசியலில் சேர்வீர்களா என்கிறார்கள். என்னை பிரபல கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர் நேரில் சந்தித்து தங்கள் கட்சியில் சேர அழைப்பு விடுத்தார்கள். மறுத்துவிட்டேன். என்னை கட்சியில் சேர அழைத்தது யார் என்பதை சொல்லவிரும்பவில்லை. கோடி ரூபாய் கொடுத்தால் பிரசாரத்துக்கு செல்வீர்களா என்று கேட்டால் நிச்சயம் மாட்டேன். கோலிவுட்டில் நடிகையாக நல்லதொரு இடத்தை பிடிக்கவே ஆசைப்படுகிறேன். இவ்வாறு ஓவியா கூறினார்.

Related posts