பெண்கள் இருவர் கொலை பயங்கரவாத தாக்குதலே

மொறோக்கோ நாட்டில் கொல்லப்பட்ட டென்மார்க் நோர்வே நாடுகளை சேர்ந்த பல்கலைக்கழக மாணவிகள் இருவரும் சந்தித்தது பயங்கரவாத தாக்குதலே என்று டென்மார்க் உளவுப்பிரிவு கூறுகிறது.

இவர்கள் கொலை தொடர்பாக வெளியான இரண்டு காணொளிகளையும் பரிசோதனை செய்த உளவுப்பிரிவினர் அவை உண்மையானவை என்று கூறியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் மேலும் பல உல்லாசப் பயணிகளை கொல்ல திட்டமிட்டிருந்த பத்து பயங்கரவாதிகளை மொறோக்கோ போலீஸ் கைது செய்துள்ளது.

இது ஒரு பயங்கரவாத தாக்குதலே என்ற மொறோக்கோ போலீசாரின் முடிவையே டேனிஸ் உளவுப்பிரிவும் அங்கீகரித்துள்ளது.

மொறோக்கோவில் உண்டாகியிருக்கும் இந்த அவல நிகழ்வு அழகிய அற்லஸ் மலையை பார்க்கப் போகும் டேனிஸ் உல்லாசப்பணிகளின் வயிற்றில் கொறக்கா புளியை கரைத்துள்ளது.

——————–

மனோநிலை பாதிக்கப்பட்ட முதியோருக்கு உதவி

டென்மார்க்கில் மனோநிலை பாதிக்கப்பட்ட முதியோருக்கு உளவியல் நிபுணர்கள் உதவியளிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. திஸ்ரெல் நகரம் முதற் கொண்டு நான்கு நகரசபைகளில் பரீட்சார்த்தமாக செய்யப்பட இருக்கிறது.

திடீரென உடலில் பாதிப்பு ஏற்பட்டு அனைத்தையும் இழந்த நிலைக்கு போகும் முதியோரை அதிர்ச்சியில் இருந்து மீட்க இத்தகைய சிகிச்சை வழங்கப்பட இருக்கிறது.

——————

பீட்டர் மாட்சனின் நீர்மூழ்கி கப்பல் பொடிப்பொடி பற்பொடியானது

சுவீடன் நாட்டு பெண் ஊடகவியலாளர் கிம் வால் படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார், குடிசைக் கைத்தொழில் போல நீர்மூழ்கி கப்பல் தயாரிக்க வல்ல பீட்டர் மாட்சன்.

இவருடைய நீர்மூழ்கிக் கப்பலை உடைத்துத் தள்ளுமாறு நீதிமன்று உத்தரவிட்டிருந்தது. அதற்கமைய இது உடைக்கப்பட்டது.

இவருடன் நீர் மூழ்கி கப்பலில் பயணித்த பெண்மணி துண்டு துண்டாக கடலில் மிதந்தது தெரிந்ததே.

அலைகள் 23.12.2018 ஞாயிறு

Related posts