சர்வஜன வாக்கெடுப்பு குறித்து தீவிரமாக ஆராய்கின்றார் சிறிசேன

பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் அரசமைப்பிற்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் பாராளுமன்ற தேர்தல்கள் இடம்பெறவேண்டுமா என்பது குறித்த சர்வஜன வாக்கெடுப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

இலங்கை ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு குறித்து நீதிமன்றம் இந்த வாரம் தனது தீர்ப்பை வெளியிடவுள்ள நிலையிலேயே ஜனாதிபதியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமாஅதிபர் ஜயந்த ஜயசூரியவுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

எனினும் இந்த பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்கள் எவையும் வெளியாகவில்லை

பாராளுமன்ற தேர்தல்கள் இடம்பெறவேண்டுமா என சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது குறித்து சிறிசேன தனது சட்ட ஆலோசகர்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதை இலங்கை அரசமைப்பு கட்டுப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts