‘எந்திரன்’ வெற்றிக்கு கிடைத்த 1 கோடி ரூபாய் செக்

எந்திரன் படம் வெற்றி அடைஞ்ச பிறகு, கலாநிதி மாறன் எங்கிட்ட ஒரு கோடி ரூபாய்க்கு செக் கொடுத்தார். அப்படியொரு உண்மையான மனசு அவருக்கு என்று பேட்ட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசினார்.

‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

பேட்ட படத்தில் ஒரு பாடல் 3ம் தேதியும் அடுத்த பாடல் 7ம் தேதியும் வெளியிடப்பட்டது. முழுப் பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழா, இன்று 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரமாண்டமாக நடைபெற்றது.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

2.0 படம் உலக அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, வட மாநிலங்கள், வெளிநாடுகள் என எல்லா இடங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலக மக்கள் அனைவருக்கும் நன்றி.

இந்த வெற்றி அனைத்தும் இயக்குநர் ஷங்கரையே சேரும். படத்தின் தயாரிப்பாளரையே சேரும். அத்தனை டெக்னீஷியன்களும் வெற்றிக்குக் காரணம்.

ரோபோவுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். எந்திரன் பண்ணும் போது, வேறொரு தயாரிப்பாளர்தான் இருந்தார். ஆனால் பட்ஜெட் எகிறியது. சொன்ன பட்ஜெட்டில் 30 சதவிகிதம்தான் எடுக்க முடிஞ்சுச்சு.

அதுக்குப் பிறகு என்னடா பண்றதுன்னு யோசிக்கும் போதுதான் கலாநிதி மாறன்கிட்ட போய் சொன்னேன். சரின்னு ஒத்துக்கிட்டாரு. கதை கேளுங்கன்னு சொன்னேன். நீங்க இருக்கீங்க, ஷங்கர் இருக்கார். இது போதும்னு சொன்னாரு.

அதுக்குப் பிறகு எந்திரன் ரிலீஸாச்சு. மிகப்பெரிய வெற்றி அடைஞ்சுச்சு. அதுக்குப் பிறகு படம் நல்ல வசூல்னு சொல்லி, கலாநிதி மாறன் வந்து, ஒரு கோடி ரூபாய்க்கு செக் கொடுத்தார். எனக்கு மட்டுமில்ல, ஷங்கருக்கு, மற்ற டெக்னீஷியன்களுக்குன்னு கொடுத்தார். அப்படியொரு தயாரிப்பாளரைப் பாக்கறது அபூர்வம்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

Related posts