‘2.0’ படத்தில் இருந்து விலக நினைத்தேன்: ரஜினி பேச்சு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும். இப்படத்துக்கு லைகாவின் சுபாஷ்கரண் ரூ.600 கோடி முதலீடு செய்திருக்கிறார். என்னை நம்பியில்லை. ஷங்கரை நம்பி முதலீடு செய்திருக்கிறார். ஷங்கர் ரசிகர்களை மகிழ்விக்க தவறுவதில்லை.

இந்தப் படம் ஆரம்பித்தபோது எனக்கு உடல் நிலை மோசமானது. ’என்னால் 5 வரி வசனம்கூட பேச முடியாமல் போனது. என்னை விட்டுவிடுங்கள் ஷங்கர். என்னால் முடியவில்லை. வாங்கிய பணத்தை திருப்பித் தந்து விடுகிறேன்’ என்றேன். ஷங்கர், ’சார் நீங்க இல்லாமல் இது முடியாது’ என்றார். ஷூட்டிங்கில் அவ்வளவு உதவியாக இருந்தார்.

ஷங்கரின் இந்தப் படம் அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். ஷங்கரும் உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், சுபாஷ்கரண் பற்றியும் சொல்ல வேண்டும். நல்ல நண்பர்கள் கோஹினூர் வைரம் மாதிரி. சுபாஷ் எனக்கு அப்படித்தான். நான் உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது அவர் என்னை தனிமையில் சந்தித்துப் பேசினார். என் கைகளைப் பிடித்துக் கொண்டு ’4 மாதங்கள் இல்லை சார் 4 வருடங்கள்கூட காத்திருப்பேன். முடியவில்லை என்றால் படத்தை ட்ராப் செய்வேன். ஆனால், நீங்கள் இந்தப் படத்தை செய்வீர்கள்’ என்றார். நன்றி சுபாஷ்.

இடையில் இந்தப் படம் ஏன் இவ்வளவு லேட் ஆகுது. வருமா என்றெல்லாம் பேசினார்கள். வந்தா கண்டிப்பாக ஹிட் அடிக்கனும். நான் சினிமாவ சொன்னேன். ஜனங்க வரும்னு முடிவு பண்ணிட்டாங்க. ஹிட்டுன்னும் முடிவு பண்ணிட்டாங்க. படம் சூப்பர் டூப்பர் ஹிட்

இவ்வாறு ரஜினி பேசினார்.

Related posts