புற்றுநோயை வெற்றி கொள்ளும் நாள் தொலைவில் இல்லை!

அபரிமிதமாக வளர்ந்த விஞ்ஞானம் மருத்துவத் துறையில் பெரிய அளவில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இருந்தும் உயிர்கொல்லி நோய்கள் உட்பட எத்தனையோ நோய்களுக்கு இன்றும் சிகிச்சையில்லை என்பதே உண்மை. அதிலும் புற்றுநோய்க்கு இன்றும் நிரந்தரத் தீர்வு இல்லை. புற்றுநோய் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதுடன், தாங்க முடியாத வலியையும் வேதனையையும் தருகிறது.

இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சையில் முற்றிலும் புதுவகையான வழிமுறையைக் கண்டறிந்த ஜேம்ஸ் அலிசன், டசுக்கு ஹோன்ஜோ ஆகிய இரண்டு விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் அலிசன் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அவர் டெக்ஸாஸ் பல்கலைக்கழக அண்டர்சன் புற்றுநோய் நிலையத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர். டசுக்கு ஹோன்ஜோ ஜப்பானைச் சேர்ந்தவர். அவர் ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு கலங்களின் புரதச் சத்தைப் பல்கிப் பெருகச் செய்து, நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு முறையை வலுவாக்கி, அதன் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கலங்களை எதிர்த்து அழிப்பது எப்படி என்பதை இந்த விஞ்ஞானிகள் மருத்துவ உலகுக்குக் காட்டினர். அவர்களின் இந்த வழிமுறையை அடியொற்றி பல சிகிச்சைமுறைகள் தோன்றின. அவை புற்றுநோயாளிகளின் வலியைக் குறைப்பதுடன், அவர்களின் வாழ்நாளையும் நீடித்தன.

நான்கு நபர்கள் அமரக் கூடிய காரில் நூறு பேர் அமர்ந்தால் என்ன ஆகும் என்பதை நம்மால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. புற்றுநோய் என்பது அத்தகைய ஒன்றுதான். இதில் ஒரே இடத்தில், நூறு என்பது ஆயிரம், பத்தாயிரம், ஒரு இலட்சம் என்று கலங்கள் பெருகி தீராத வேதனை அளித்து, இறுதியில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

ஆரம்பக் கட்ட புற்றுநோய்க்கு முழுமையான சிகிச்சை முறைகள் உள்ளன. கதிர்வீச்சு, கீமோதெரபி போன்ற அந்த சிகிச்சை முறைகளால் புற்றுநோயாளிகள் அவஸ்தைப்படுவதுண்டு.மேலும், இந்த சிகிச்சைமுறைகள் புற்றுநோய் கலங்களை மட்டும் அழிப்பதில்லை. உடலில் உள்ள நல்ல கலங்களையும் சேர்த்தே அழிக்கின்றன.

பொதுவாக, நம் உடலுக்குள் ஏதேனும் அந்நியப் பொருள் தோன்றினாலோ நுழைந்தாலோ நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு கலங்கள், அவற்றுக்கு எதிராகப் போரிட்டு அழிக்கும். புற்றுநோயை எதிர்க்கும் கலங்கள் ‘டி – செல்கள்’ எனப்படுகின்றன. இந்த டி- கலங்கள் உடலில் இயற்கையாகவே தோன்றினாலும், அவை புற்றுநோய் கலங்களை எதிர்த்துப் போராடுவதில்லை. டி- கலங்களின் போராடும் தன்மையைத் தடுக்கும் விதமாகப் பல தடைகள் அந்த டி- கலங்களில் உள்ளன.

அத்தகைய தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை அகற்றுவது குறித்தும் அலிசனும் ஹோன்ஜோவும் தனித்தனியாக வெவ்வேறு நாடுகளில் இருந்தபடி ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இவர்களின் ஆராய்ச்சிக்கு முன்புவரை, புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கலங்களை அழிப்பதாகவே இருந்தது.

‘நம் உடலில் இருக்கும் டி- கலங்களாலேயே புற்றுநோய் கலங்களை அழிக்க முடியும் எனும்போது, புற்றுநோய் கலங்களை நாம் ஏன் அழிக்க வேண்டும்?’ என்று இவர்களுக்குள் எழுந்த கேள்வியே, இவர்களது ஆராய்ச்சியின் தொடக்கப் புள்ளி.

டி- கலங்களில் இருந்த ‘சி.டி.எல்.ஏ.-4’ (CTLA-4) எனும் தடையை அலிசன் கண்டறிந்தார். அந்தத் தடையைக் களையும் வழிமுறையையும் வெற்றிகரமாகக் கண்டறிந்து அதை மருத்துவ உலகுக்கு அவர் நிரூபித்துக் காட்டினார். இது நடந்தது 1997 இல். பிறகு 2010-இல் மனிதர்களிடம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

ஆனால், அதற்கு முன்பே 1992-இல் டி கலத்தில் இருந்த ‘பி.டி-1’ (PD-1) எனும் தடையை ஹோன்ஜோ கண்டறிந்தார். எனினும் 2012-இல்தான், இவரது ஆய்வு மனிதர்களிடையே வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. இன்று மருத்துவ உலகம் இந்த இரண்டு முறைகளையும் ஒருங்கே பயன்படுத்துகிறது. CTLA-4, PD-1 போன்று வேறு என்னென்ன தடைகள் உள்ளன என்பதைக் கண்டறியும் முயற்சியில் இன்று ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் ஈடுபட்டுள்ளது.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நாளில் அலிசன் நியூ​ேயார்க்கில் இருந்தார். நோய் எதிர்ப்பு இயலில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றுவதற்காக அவர் அங்கு வந்திருந்தார். அதிகாலை 5.30 மணிக்கு அவருடைய மகனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை எழுப்பி விட்டது. தகவலைச் சொன்னார் மகன். உறக்கக் கலக்கத்தில் இருந்தவர், ‘சரி’ என்று சொல்லியபடி மீண்டும் உறங்கி விட்டார்.

6.30 மணிக்கு அவரது அறைக் கதவு பலமாகத் தட்டப்பட்டது. பதறியடித்து எழுந்து கதவைத் திறந்தால், அவரது அறைக்கு முன்பாக, அந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த அனைவரும் ஷாம்பெயின் போத்தலைக் கையில் ஏந்தியபடி நின்று கொண்டிருந்தனர். திறக்கப்பட்ட ஷாம்பெயின் போத்தலிலிருந்து கொப்பளித்த நுரை அவரின் மீது பீச்சியடிக்கப்பட்டது.

எந்தத் திட்டமிடலுமற்ற ஒரு கொண்டாட்டம் அங்கு அரங்கேறியது. அந்தக் கொண்டாட்டத்தின் இடையில்தான் நோபல் குழுவிடமிருந்து அதிகாரபூர்வத் தகவல் அவருக்கு வந்தது. உடனடியாகச் செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு பேட்டி எடுத்தனர்.

“உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு இன்னும் விடியவே இல்லை. என் கண்களில் இன்னும் உறக்கம் மிச்சமுள்ளது. நான் ஒரு சாதாரண விஞ்ஞானி. என்னுடைய ஆராய்ச்சி முடிவுகள், சக மனிதனின் உயிரைக் காப்பாற்றுகிறது என்பதை நினைக்கும் போது கிடைக்கும் ஆத்ம திருப்தியை விட வேறு என்ன பெரிய மகிழ்ச்சியும் பெருமையும் எனக்குக் கிடைத்து விடப் போகிறது?” என்று அவர்களிடம் தெரிவித்து விட்டு, அலிசன் தன்னுடைய அறைக்குள் சென்று விட்டார்.

அரசு மருத்துவமனையில் சாமானிய மனிதர் முதல் உலகின் அதிநவீன மருத்துவமனையில் அப்பிள் நிறுவனர் வரை பலரைக் காவு வாங்கிய இந்தப் புற்றுநோய், உலகில் இல்லாமல் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை எனும் நம்பிக்கையை இவர்கள் அளித்துள்ளனர். நம்புவோம்.

நம்பிக்கைதானே நோய் தீர்க்கும் முதல் மருந்து.

Related posts