காச நோயை உலகப் பந்தில் இருந்து அகற்ற தலைவர்கள் முடிவு

வருடாவருடம் ஐ.நா சபையில் கூடும் தலைவர்கள் தத்தம் நாட்டு மக்களுக்கு ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்த ஏதாவது பேசி முழங்கி பின் ஊர் போவது இப்போது ஓர் உற்சவமாகிவிட்டது.

பலர் ஆளில்லாமல் வெறித்தோடிய கதிரைகளுக்கு முழங்குவதும் நடைபெறுவதுண்டு.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தத்தமது நாட்டு தலைவர்களின் பேச்சு பொன் குஞ்சு பேச்சாக அமையும்.

இது வரை காலமும் இந்தத் தலைவர்கள் ஐ.நாவில் பேசி என்ன விடிந்திருக்கிறதென இன்று வரை கேட்க யாரும் இல்லாமல் தொடர்கிறது உற்சவம்.

இருந்தாலும்..

இந்த ஐ.நா உற்சவத்தில் உருப்படியாக ஏதாவது செய்யவும் தலைவர்கள் முயல்வதுண்டு அதில் இம்முறை சிக்குண்டுள்ள விடயம் காச நோயாகும்.

இந்த நோய் பழைய பாலும் பழமும் படம் வெளி வந்த காலத்தில் இருந்து இன்றுவரை மனித குலத்தை ஆட்டிப்படைக்கும் ஒரு நோயாகவும், தொற்று நோயாகவும் இருந்து வருகிறது.

வருடம் தோறும் இந்த நோய்க்கு 1.7 மில்லியன் மக்கள் உலகம் முழுவதும் உயிர் கொடுத்து வருகிறார்கள்.

பொதுவாக..

ஏழை நாடுகள்.. படிப்பறிவு குன்றிய நாடுகள்.. வளர்ச்சியடையாத நாடுகள்.. போதிய வைத்திய வசதி இல்லாத நாடுகளில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

நோய் பிடித்தால் சுமார் இரண்டு வருடங்களில் நோயாளியை உருக வைத்து மரணக்குழியில் தள்ளிவிடும்.

இன்று உலகம் முழுவதும் ஒவ்வொரு மூன்று பேர்களுக்கும் ஒருவர் என்ற அடிப்படையில் இந்த நோய் காணப்படுகிறது.

இதிலிருந்து மனித குலத்தை காப்பாற்றக்கூடிய வைத்தியச் சிகிச்சைகளும் இன்று வரை சரியாகவும் தாக்க முடையதாகவும் அமையவில்லை, சிகிச்சைகள் கூட பெரும் பக்க விளைவுகள் கொண்டவையாகவே இருக்கின்றன.

ஆகவே நோயை பரவ விடாது தடுத்தல், உருவான நோயில் இருந்து நோயாளியை மரணமடையாது மீட்டெடுத்தல் என்ற இரண்டு வகை சிகிச்சைகளையும் காத்திரமாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

அதற்கு என்ன வழி..?

எது முன்னெப்போதும் இல்லாத புதிய யுனிக் ஆன சிகிச்சை முறை..?

கண்டு பிடிப்பதற்கமைவாக தலைவர்கள் கலந்துரையாட இருக்கிறார்கள்.

இந்த கலந்துரையாடலில் அடிப்படை விடயம் பெரும் பணத்தை உலக நாடுகள் ஒதுக்க வேண்டும் என்பதாகும்.

அப்பணத்தால் காச நோயாளி குணப்படுவானோ இல்லையோ உலக மருந்து கம்பனிகள் செழிக்கும் என்பதும் இன்னொரு சிறு எண்ணம்.

எவ்வாறாயினும்..

சரியான மருத்துவச் சிகிச்சையானது காற்றைப் போல நீரைப்போல உலகம் முழுவதும் பட்டி தொட்டியெல்லாம் போய் சேர வேண்டும் என்று முடிவு செய்யவுள்ளார்கள் என்கிறது ஐ.நா குறிப்புரை.

ஐ.நா மீது உருவாகி வரும் அதிருப்தியை நீக்க வேண்டுமானால்..

ஐக்கிய நாடுகள் சபை இந்த உலகத்திற்கு உருப்படியாக சில வேலைகளை இனியாவது செய்ய வேண்டுமென கருதப்படுகிறது. இதற்காக ஒரு சிறப்பு அறிக்கையை ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

உலகத்தின் வறுமையை ஒழிப்பது, மலசல கூட வசதிகளை ஏற்படுத்துவது, மலேரியாவை ஒழிப்பது, பெண்கள் கல்வியை உயர்த்துவது, உலக வருமான ஏற்றத்தாழ்வை குறைப்பதென பல திட்டங்களை அதன் மூலமாக முன்மொழிந்துள்ளது.

அதில் ஓரங்கமாகவே காச நோய் ஒழிப்பு விவகாரம் இந்த ஆண்டு முக்கியம் பெற்றுள்ளது.

உலகத் தலைவர்களால் காச நோயை பூமிப்பந்தில் இருந்து முற்றாக விரட்டியடிக்க முடியுமா..?

ஒரு காலத்து பயங்கரவாதமான காச நோய் உலகில் இருந்து விடை பெறுமா..?

காத்திருக்கிறது உலகம்.

அலைகள் 26.09.2018

Related posts