சாந்தனின் உடலுக்கு முல்லைத்தீவு – மாங்குளத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி

மறைந்த சாந்தனின் பூதவுடல் முல்லைத்தீவு – மாங்குளம் சந்திப் பகுதியில் கொண்டு செல்லப்பட்டு, அங்கும் பொது மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து, விடுதலையான சாந்தன், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரது உடல் சிவப்பு மஞ்சள் வர்ணக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு, வடக்கின் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களின் பல இடங்களிலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுமென ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி, அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்ட சாந்தனின் உடல் முல்லைத்தீவு – மாங்குளம் சந்திப் பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு, உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டு சாந்தனுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

——–

சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுக்குடியிருப்பில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலிப் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொதுச் சந்தை வளாகத்துக்கு முன்பாகவும் புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதிகளிலும் சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பதாதை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

தாயக செயலணி என்ற அமைப்பினர் இப்பதாதையை கட்டி சாந்தனுக்கான தமது அஞ்சலியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதேபோன்று சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலிப் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன.

Related posts