உலகளவில் ரூ.100 கோடியைத் தாண்டியது

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘புஷ்பா’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை அள்ளிக் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் (டிச.17) உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
‘ரங்கஸ்தலம்’ வெற்றிக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம், ஹிட் பாடல்கள், சர்ச்சைகள், கடைசி நேர இழுபறி எனப் பெரும் எதிர்பார்ப்புக்கிடைய இப்படம் வெளியானது. சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் முதல் நாள் வசூலில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்தது.
இந்நிலையில் படம் வெளியாகி இரண்டே நாட்களில், உலகளவிலான பாக்ஸ் ஆஃபீஸில் (WW box office) ரூ.100 கோடி வசூலைக் குவித்துள்ளது.
கரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான படங்களில் இதுவரை ‘சூர்யவன்ஷி’ படமே அதிக வசூல் சாதனை செய்த படமாகக் கருதப்பட்டு வந்தது. அப்படம் வெளியான முதல் நாளில் வசூலித்த தொகை ரூ.26.29 கோடி. இதனை கடந்த டிச.16 அன்று வெளியான ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ படம் வெளியான முதல் நாளில் ரூ.32.67 கோடி வசூல் செய்து முறியடித்திருந்தது. அதையும் முறியடித்து புஷ்பா முதல்நாளில் ரூ.45 கோடி வசூலித்தது. தற்போது வேர்ல்டுவைட் பாக்ஸ் ஆஃபீஸில் இரண்டே நாளில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது.தியேட்டருக்கு வரச்சொன்ன அல்லு அர்ஜூன்: புஷ்பா வெளியீட்டிற்கு முன் பேசியிருந்த அல்லு அர்ஜூன், “இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே மக்கள் சினிமா பார்க்க தியேட்டர் வரும் பழக்கம் குறைந்துவிட்டது. நான் புஷ்பாவை மட்டும் வைத்து இதைச் சொல்லவில்லை. இந்திய சினிமா மட்டுமல்ல உலக சினிமாவும் திரையரங்குகளில் வெற்றி பெற வேண்டும். திரையரங்குக்கு வாருங்கள். ஸ்பைடர் மேன் நோ வே ஹோம், உலக மக்களை திரையரங்குக்கு கூட்டிவரும் என நம்புகிறேன். அப்படியே புஷ்பா இந்திய மக்களை திரையரங்குகளுக்கு கூட்டி வரும். அடுத்த வாரம் 83 திரைக்கு வருகிறது. அந்தப் படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘புஷ்பா’ திரைப்படம் ‘சூர்யவன்ஷி’ மற்றும் ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ ஆகிய படங்களை முதல் நாள் வசூலில் பின்னுக்குத் தள்ளியது.

Related posts