இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு

ஒமைக்ரான் அச்சத்தால் உலக முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் உள்ள தங்கள் முதலீடுகளை வேகமாக விற்பனை செய்து வருவதன் எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது. இதனால் ஆசியாவின் மிக மோசமாகச் செயல்படும் நாணயமாக இந்திய ரூபாய் மாறி வருகிறது.
உலகம் முழுவதும் கரோனா தாக்கத்தால் பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக மீட்சி ஏற்பட்டு வந்தது.
பல்வேறு நாடுகளும் தொழில்துறைக்கு ஊக்கம் தரும் அறிவிப்புகளை வெளியிட்டதால் பொருளாதார சுழற்சி மீண்டும் சீரடையத் தொடங்கின.
இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகளும் கடந்த 10 மாதங்களாக கடும் ஏற்றத்தில் இருந்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது.
இந்தநிலையில் தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கரோனா வைரஸ் ஒமைக்ரான் கண்டறியப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கமான சூழல் நிலவுகிறது. இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
ஒமைக்ரான் அச்சத்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இருந்து அதிகப்படியான முதலீடுகளை விற்பனை செய்து பணத்தை எடுத்து வருகின்றனர். இதனால் அன்னிய செலாவணி இருப்பும் படிப்படியாகக் குறைந்து இந்திய ரூபாய் மதிப்பு குறைத்து வருகிறது. இன்று காலை வர்த்தகத்தில் இந்திய ரூபாய் 75.63 ரூபாய் அளவில் இருந்தது.
இது ஏறக்குறைய 2020-ல் கரோனா தொற்றுப் பாதிப்பு கடுமையாக இருந்த ஜூலை மாத நிலவரமாகும். தற்போது மீண்டும் அதே நிலையை அடைந்துள்ளதால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையில் பெரும் இடைவெளி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது
இதனால் ஆசியாவின் மிக மோசமாகச் செயல்படும் நாணயமாக இந்திய ரூபாய் மாறியுள்ளது. 2021-ம் ஆண்டு விடைபெறவுள்ள தருவாயில் உலகளாவிய அளவில் இந்திய பங்குச் சந்தையில் இருந்து 4 பில்லியன் டாலர்கள் முதலீடு வெளியேறியுள்ளது.
இதனால் இந்த காலாண்டில் மட்டும் இந்திய ரூபாய் மதிப்பு 2.2% குறைந்துள்ளது. ஒமைக்ரான்
மாறுபாடு பற்றிய கவலைகள் உலகச் சந்தைகளை உலுக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், கோல்டுமேன் சேசே குழுமம் மற்றம் நுமுரா கோல்டிங்ஸ் நிறுவனங்கள் சமீபத்தில் பங்குகுளை விற்றன. இதனால் அதிக வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி பின்பற்றும் கொள்கையும் ரூபாய் மதிப்பு சரிவடைய காரணமாக உள்ளன.
இதுமட்டுமின்றி உலகளாவிய பொருளாதார மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்திய ரூபாய் மதிப்பு குறித்து பல்வேறு தரவுகளை வெளியிட்டுள்ளன. அதில் மார்ச் இறுதிக்குள் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 78 ஆக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிகழ்ந்தால் 2020-ம் ஆண்டு ஏப்ரலில் ஏற்பட்ட 76.90 என்ற சரிவையும் விட கூடுதலாகி விடும்.
கரோனா தொற்றுநோய் தாக்கத்தில் இருந்து இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு, ரூபாய் மதிப்பு சரிவு என்பது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பணவீக்க அபாயமும் உள்ளது. இதன் எதிரொலியாக ரிசர்வ் வங்கிக்கு வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு மிகக் குறைந்த அளவில் பராமரிக்க முடியாத சூழல் உருவாகி வருவதாக பொருளாதார ஆலோசகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related posts