இலக்கியத்தில் புதுநெறி வழிகாட்டிய பேராசிரியர் கைலாசபதி

திறனாய்வுத்துறையில் ஒளிவிளக்காகத் திகழ்ந்த பேராசிரியர் கைலாசபதியின் எழுத்துக்களை இன்றைய இளம் படைப்பாளிகள் அவசியம் படிக்க வேண்டும். இலக்கியவாதியாக, -பத்திரிகை ஆசிரியனாக, பல்கலைக்கழக ஆசானாக, -நிர்வாகியாக அத்தனை துறையிலும் தமது ஆளுமையை இளம் வயதிலேயே நிரூபித்து அழியாத் தடம் பதித்துச் சென்றவர் பேராசிரியர் கைலாசபதி. இலக்கியத் திறனாய்விலே சமூகவியல் நோக்கினை வலியுறுத்தியவர்.

இலக்கியம் படித்து இரசிப்பதற்கு மட்டுமே உரியதென்ற ‘கலை கலைக்காக’ கோட்பாட்டை வன்மையாகக் கண்டித்தார். உருவத்தை விட உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் வேண்டுமெனவும் இலக்கியத்திற்குச் சமூகப்பணி இருக்கிறதெனவும் அவர் வலியுறுத்தினார். இக்கருத்துக்களால் வந்த எதிர்வாதங்களை துணிவுடன் எதிர்கொண்டு தகர்த்தெறிந்தார்.

இக்காலத்தில் அவ்வப்போது பத்திரிகை, -சஞ்சிகை, -வானொலி, -மேடைகள் பலவற்றிலும் அவர் வெளியிட்ட கருத்துக்கள் ஈழத்து இலக்கிய வரலாற்றை அறிய முயல்வோர்க்கு பாடங்களாக உதவிடும் எனலாம்.

1950 -ஆம் ஆண்டுகளில் எழுதத் தொடங்கியவர் 1960 -ஆம் ஆண்டுகளில் தமிழ்த் திறனாய்வுத்துறையில் ஒரு புதுநெறி காட்டிய சக்தி வாய்ந்த மனிதனாக முத்திரை பதித்தார். 1982 டிசம்பர் 6 -ஆம் திகதி சிந்திப்பதை நிறுத்தும் வரை முற்போக்கு இலக்கியம் குறித்தும் அதன் வளர்ச்சிக்கான பணிகள் குறித்தும் ஓயாது சிந்தித்துச் செயற்பட்டு வந்தார்.

அன்று எழுத்தாளர்கள் பலரும் தமது படைப்புகள் குறித்து கைலாசபதி என்ன கருதுகிறார் என அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். தமது படைப்புகளுக்கு அவரிடம் அணிந்துரை பெறுவதில் பலர் பெருமை கொண்டனர். தமிழ் எழுத்தாளர் தம் படைப்புகளின் வழியை, -திசையை நிர்ணயிக்கும் பணியை கைலாசபதி தன் ஆளுமைக்குட்படுத்தியிருந்தார் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்துப் பத்திரிகைகள், -சஞ்சிகைகள் அவரது எழுத்துக்களை விரும்பிப் பெற்று பிரசுரித்தன. தாமரை, – சாந்தி, -சரஸ்வதி, -செம்மலர், -தீக்கதிர், -ஜனசக்தி, -ஆராய்ச்சி மற்றும் பல ஏடுகள் அவரது கட்டுரைகளை விரும்பியேற்றுப் பிரசுரித்தன. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், -தேசிய கலை இலக்கியப் பேரவை போன்றவற்றின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அவர் விளங்கினார்.

அன்று சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியெனச் சொல்லப்பட்ட தோழர் என். சண்முகதாசன் தலைமையிலான கட்சியின் ஆதரவாளராக பேராசிரியர் கைலாசபதி செயற்பட்டார். கட்சிப் பத்திரிகையான ‘தொழிலாளி’ பத்திரிகையில் புனைபெயரில் பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். கட்சியின் ஆதரவுடன் செயற்பட்ட தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் போராட்ட நடவடிக்கைகளை ஆதரித்தும் எழுதி வந்தார்.

ஒப்பியல் ஆய்வு செய்து நவீன தமிழிலக்கியத்தில் அழியா இடம்பெற்ற பேராசிரியர் க. கைலாசபதியின் நினைவுகள் வரலாற்றில் நீடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நூலுருவில் வெளிவந்த அவரது இலக்கியத் திறனாய்வு நூல்கள் வருமாறு:

1. இரு மகாகவிகள், 2. பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், 3. தமிழ் நாவல் இலக்கியம், 4. ஒப்பியல் இலக்கியம், 5. அடியும் முடியும், 6. இலக்கியமும் திறனாய்வும், 7. பாரதி நூல்களும் பாட பேத ஆராய்ச்சியும்,

8. திறனாய்வுப் பிரச்சினைகள், 9. சமூகவியலும் இலக்கியமும், 10. கவிதை நயம் (இணையாசிரியர்),

11. இலக்கியச் சிந்தனைகள், 12. ரமில் கீரோயிஸ்ற் பொயற்றி (ஆங்கிலம்) பேராசிரியர் கைலாசபதியின் மறைவின் பின்னர் அவரது ஆளுமை – பணிகள் குறித்தும் பல நூல்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எனது ‘ஈழத்து மண் மறவா மனிதர்கள்’ நூலில் இடம்பெற்ற பதிவு)

வி. ரி. இளங்கோவன்

Related posts