பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வருங்காலத்தில் மாற்றங்கள் நிகழும் என்று பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 29-ம்தேதி தொடங்கியது. இக் கூட்டத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், ஜெய்சங்கர், பிரஹலாத் ஜோஷி, ஜிதேந்திர சிங், பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மக்களவை, மாநிலங்களவையில் உள்ள அனைத்து பாஜக எம்.பி.க்களும் பங்கேற்றனர். நாடாளுமன்ற கூட்டத்துக்கு பாஜக எம்பிக்கள் வருகை குறைந்து வருவது தொடர்பாக பிரதமர் மோடி, ஏற்கெனவே தங்களது கட்சி எம்பிக்களை எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலும் எம்பிக்களுக்கு பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடிபேசியதாவது: தயவுசெய்து நாடாளுமன்ற கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். இதைப் பற்றி நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். உங்களை குழந்தைகளை போல நடத்துவது சரியல்ல.
நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். அப்படி செய்யாவிட்டால் சரியான நேரத்தில் மாற்றங்கள் ஏற்படும்.
அனைவரும் சூர்ய நமஸ்காரம் செய்துவிட்டு கூட்டத்தொடருக்கு வாருங்கள். அது உங்களுக்கும் நல்லது, நாட்டு மக்களுக்கும் நல்லது. இவ்வாறு அவர் பேசினார்.
கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பேசும்போது, “அனைத்து எம்.பி.க்களும் மாவட்ட கட்சித் தலைவர்கள், மண்டல பிரிவு கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும். அவர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். கட்சியின் வளர்ச்சிக்கும், தொகுதி மேம்பாடு தொடர்பாகவும் எம்.பி.க்கள் ஆலோசனை நடத்த வேண்டும்” என்றார். – பிடிஐ

Related posts