சார்ள்ஸை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக்க அனுமதி

சிவஞானசோதியின் மறைவையடுத்து பொதுச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சுந்தரம் அருமை நாயகமை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த பரிந்துரைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் நேற்று முன்தினம் (26) கூடிய பாராளுமன்ற பேரவை தனது இணக்கப்பாட்டை வழங்கியுள்ளது.

சுந்தரம் அருமைநாயகம் இதற்கு முன்னர் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பி.எஸ்.எம்.சார்ள்ஸை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைக்கும் பாராளுமன்ற பேரவை தனது இணங்கத்தை வழங்கியுள்ளது. இவர் இதற்கு முன்னர் வடமாகாண ஆளுநராகக் கடமையாற்றியிருந்தார். இது தவிரவும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளராகவும், சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் அவர் கடமையாற்றியிருந்தார்.

ஒன்லைன் முறையில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் ஆகியோர் இணைந்துகொண்டிருந்தனர்.

Related posts