ரஜினியின் நாணய அரசியல்: பாரதிராஜா வரவேற்பு

ரஜினியின் ‘நாணய அரசியலில்’ ஒரு தமிழனை ‘அரசனாக’ ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவேன் என்ற மனிதத்தை, கொள்கைகளாகப் பார்க்காமல் அதை ரஜினியாக, ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (மார்ச் 12) பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. தனது அரசியல் பார்வை, அரசியல் வருகை, அரசியல் மாற்றுத்துக்காக வைத்துள்ள திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், பத்திரிகையாளர்கள் கேள்விகளை எதிர்கொள்வதையும் ரஜினி தவிர்த்தார்.

தனது பேச்சில், “தன் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் வெவ்வேறாக இருக்கும். நான் கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன். இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வருவேன்” என்று ரஜினி தெரிவித்தார்.

ரஜினியின் இந்தப் பேச்சு அவரது ரசிகர்கள் மத்தியில் சிலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதே வேளையில் ரஜினியின் இந்த மாற்று அரசியலுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். ரஜினியின் நெருங்கிய நண்பரான பாரதிராஜா பல பேட்டிகளில், “ரஜினி தமிழக முதல்வராக வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனிடையே ரஜினியின் பேச்சு குறித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

”எனது நாற்பது ஆண்டு கால நட்பில், இன்று இந்தச் சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடும் ‘ரஜினி’ என்ற மந்திரத்தை விட, ‘ரஜினி’ என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன்.

இன்று அந்த மனிதம் வெளிப்படையாக, மக்களுக்கு நன்மை பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது. தமிழன் தான் ஆட்சிக்குத் தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறு, ஆகியவற்றின் மூலம் பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும்.

ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலாக அல்லாமல் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக, சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்றாக, அன்று நான் அறிந்தவை, இன்று எம் தமிழக மக்களுக்கு ஓர் விதையாகக் கூட இருக்கலாம்.

ஆருயிர் நண்பன் என்பதை விட, சிறந்த மனிதனாக, ரஜினியின் ‘நாணய அரசியலில்’ அதன் முதல் பக்கத்திலேயே ஒரு தமிழனை ‘அரசனாக’ ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவேன் என்ற மனிதத்தை, கொள்கைகளாகப் பார்க்காமல் அதை ரஜினியாக, ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன்”
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Related posts