6 மாதங்களாக சிறையிலிருந்த ரிஷாட் பதியுதீன் விடுவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் சிறுமி ஹிஷாலினி மரண வழக்கு ஆகிய இரு வழக்குகள் தொடர்பிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி கைதான ரிஷாட் பதியுதீன் எம்.பி சுமார் 6 மாதங்களின் பின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் (PTA) கீழ் தொடரப்பட்ட வழக்கு, இன்று கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவருக்கு பிணை வழங்க நீதவான் உத்தரவிட்டார்.

தலா ரூ. 50 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சிஐடியில் முன்னிலையாக வேண்டுமென அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், வெளிநாடு செல்ல தடை விதித்த நீதவான், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அவருக்கு உத்தரவிட்டார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த 16 வயது ஹிஷாலினி ஜூட் குமார் எரிகாயங்களுடன் மரணமடைந்த சம்பவம் தொடர்பான ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த வழக்கிலிருந்தும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று (14) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதவான் பிணையில் செல்ல உத்தவிட்டார்.

தனது கைது தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு விசாரணை நாளை (15) இடம்பெறவிருந்த நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர், இ.போ.ச. பஸ்களை முறைகேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து கடந்த வருடம் ஒக்டோபர் 19ஆம் திகதி CIDயினால் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் ஒரு மாதத்தின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts