திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன்: யோகி பாபு

எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன் என்று யோகி பாபு தெரிவித்துள்ளார்.
கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக ‘நவரசா’ ஆந்தாலஜி தயாராகி உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. ‘நவரசா’ ஆந்தாலஜியில் உள்ள நவரசங்களை வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.
இதில் நகைச்சுவையை மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். ‘சம்மர் ஆஃப் 92’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘நவரசா’ ஆந்தாலஜியில் நடித்திருப்பது குறித்து யோகி பாபு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சிரிப்பை வரவழைக்கும் காமெடி கதாபாத்திரங்கள் மிக வலிமையானவை. அத்தனை எளிதில் அனைவரும் செய்துவிட முடியாதது. ஆனாலும், பன்முகத்தன்மை கொண்ட பாத்திரங்களில் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தும் குணச்சித்திர பாத்திரங்களில், நடிப்பதையே நான் மிகவும் விரும்புகிறேன்.
நகைச்சுவையில் சாதனை படைத்த, தமிழ் சினிமாவின் மூத்த ஆளுமைகளான நடிகர் நாகேஷ் மற்றும் கவுண்டமணி ஆகியோர் காமெடியில் மட்டுமல்லாமல், பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து, நம் மனதைக் கவர்ந்துள்ளனர். ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ படத்தில் கவுண்டமணியும், ‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷும் நகைச்சுவைக்கு எதிரான குணச்சித்திரத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருப்பார்கள். அப்படங்களும் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றன.
அதேபோல் எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் எனது திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறேன். ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படமே, மனிதனின் உணர்வுகளை மையப்படுத்தி ஒன்பது கதைகளைச் சொல்லும் திரைப்படம். அப்படியான ஒரு படத்தில் ஒரு கனமான பாத்திரத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தி, நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. மேலும் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்”.
இவ்வாறு யோகி பாபு தெரிவித்துள்ளார்.

Related posts