அவமானப்படுத்தப்பட்டேன், மோசமாக நடத்தப்பட்டேன்

அவமானப்படுத்தப்பட்டேன், மோசமாக நடத்தப்பட்டேன் என்று ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் வனிதா விஜயகுமார்.
விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருபவர் வனிதா விஜயகுமார். பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் ஜோடிகள் ஆகிய நிகழ்ச்சிகளில் வனிதா விஜயகுமார் பணியாற்றியுள்ளார். இதில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி தற்போது தான் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் காளி வேடமிட்டு ஆடியதற்கு வனிதா விஜயகுமாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். இதனிடையே, தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக வனிதா விஜயகுமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் எனது காளி அவதாரத்துக்குப் பாராட்டுகளும், ஆதரவும் தந்த ஊடகங்கள், என் ரசிகர்கள் மற்றும் என் நல விரும்பிகளுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை விட்டு நான் வெளிநடப்பு செய்யும் முன், நான் உருவாக்கிய தாக்கத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஒருவர் கொடுமைப்படுத்துவதை, துன்புறுத்துவதை நான் என்றும் ஏற்க மாட்டேன். அது யாராக இருந்தாலும், என் குடும்பத்தினராக இருந்தாலும் சரி. இது இந்த உலகுக்கே தெரியும்.
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்தே விஜய் டிவி எனது குடும்பமாகிவிட்டது. குக்கு வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, மேலும் அவர்களது பல நிகழ்ச்சிகளில் சிறப்பு பங்கேற்பு என அவர்களோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
எங்களுக்குள் பரஸ்பர மரியாதை உண்டு. அது எப்போதுமே நீடிக்கும். ஆனால் பணிசெய்யும் இடத்தில் தொழில்முறை அல்லாது, நெறிமுறையற்ற நடத்தையை ஏற்கவே முடியாது. ஒரு மோசமான நபரால் நான் துன்புறுத்தப்பட்டேன், அவமானப்படுத்தப்பட்டேன், மோசமாக நடத்தப்பட்டேன். அவரது திமிர் காரணமாக அவரால் எனது தொழில் வளர்ச்சியை ஏற்க முடியவில்லை என்பதே இதற்குக் காரணம்.
வேலை செய்யும் இடத்தில் பெண்களை ஆண்கள் மட்டும் மோசமாக நடத்துவதில்லை, பெண்களும் அதை விட மோசமாக நடத்துகின்றனர், பொறாமை கொள்கின்றனர், நமக்கு வரும் வாய்ப்புகளை நாசமாக்க முயற்சிக்கின்றனர்.ஊரடங்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வருவதால் நான் எனது திரைப்பட வேலைகளில் மிகத் தீவிரமாக இயங்கி வருகிறேன். தொடர்ந்து நீங்கள் என்னைத் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பார்க்கலாம். உங்களை விட எல்லா விதத்திலும் மூத்த நபர், கடுமையாக உழைத்து முன்னேறியவர், முன்னேறக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களைக் கீழ்மையாகப் பார்ப்பதும், அவர்களது ஊக்கத்தைக் கெடுத்து அவமானப்படுத்துவதையும் பார்க்க வேதனையாக இருக்கிறது.
குறிப்பாக நீண்ட நாட்களின் போராட்டத்துக்குப் பின், குடும்பத்தின், கணவரின் ஆதரவு இல்லாமல் சாதிக்கும், வெற்றி காணும், 3 குழந்தைகளின் தாயை இப்படி நடத்துகிறார். பெண்கள், சக பெண்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மாறாக அவர்களின் வாழ்க்கையை மோசமாக மாற்றக் கூடாது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விடை பெறுவது வருத்தம் தான். மற்ற அத்தனை போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்.வெற்றி மட்டுமே முக்கியமல்ல. போட்டியில் பங்கேற்று, சவாலை ஏற்பதே மிக முக்கியம். சுரேஷ் சக்ரவர்த்தி, மன்னித்துவிடுங்கள். எனக்கு எது சரியோ அதை நான் செய்தாக வேண்டும். என்னால் நீங்களும் இந்த நிகழ்ச்சியை விட்டு நீங்க வேண்டியதாகிவிட்டது. ஆனால் எனது முடிவுக்கு ஆதரவு கொடுத்த நீங்கள் உண்மையான நண்பர்”
இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Related posts