ஒரே பெண்ணுக்கு சில நிமிடங்களில் 3 டோஸ் தடுப்பூசிகள்

ஒரே பெண்ணுக்கு சில நிமிடங்களில் 3 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தபட்டு உள்ளன. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மராட்டிய மாநிலம் தானே மாநகராட்சி ஊழியர் ஒருவரின் மனைவி ஆனந்த்நகரில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடச் சென்று உள்ளார். அங்கு அவருக்கு சில நிமிடங்களில் 3 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து அவர் தனது கணவரிடம் கூறி உள்ளார். இதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் கணவர் உள்ளூர் அதிகாரியிடம் பிரச்சினையை கூறி உள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவரது மனைவியின் ஆரோக்கியம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பெண், தனது கணவர் மாநகராட்சியில் பணிபுரிவதால் புகார் எதுவும் அளிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் கூறியதாவது:- எனது மனைவி முதல் முறையாக கொரோனா தடுப்பூசி போட சென்றதால் தடுப்பூசி செயல்முறை பற்றி அறிந்திருக்கவில்லை. தடுப்பூசி போட்ட பின் அவருக்கு காய்ச்சல் இருந்தது, ஆனால் அது மறுநாள் காலையில் குறைந்து விட்டது. அவர் இப்போது நன்றாக இருக்கிறார் என்று கூறினார்.

மாநகராட்சி மருத்துவ சுகாதார அதிகாரி டாக்டர் குஷ்பூ தவ்ரே இது குறித்து கூறும் போது :-

டாக்டர்கள் குழு பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று அவரை கண்காணித்து வருகிறது. அவர் நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார். இது குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளோம் என கூறினார்.

இது குறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. நிரஞ்சன் தவ்கரே கூறும் போது :-

இதுபோன்ற கொடுமையான செயல் எவ்வாறு நடந்தது? ஒரே பெண்ணுக்கு மூன்று முறை தடுப்பூசி போடப்பட்டதை ஊழியர்கள் எவ்வாறு கவனிக்கவில்லை? பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம்” என்று கூறினார்.

தானே மேயர் நரேஷ் மஸ்கே கூறியதாவது:-

இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் இப்போது விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Related posts