இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வுக்கு இந்தியா ஆதரவளிக்கும்

பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல் என்ற அடிப்படையில் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள் அதிகாரங்களை பகிர்வதற்கான இந்தியாவின் ஆதரவை உயர் ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனான நேற்றைய சந்திப்பின்போதே இந்திய உயர் ஸ்தானிகர் இவ்வாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையில் ஐந்து பேரடங்கிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவை நேற்று சந்தித்தனர்.

ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு நேற்று (17) இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் மற்றும் அரசியல் பிரிவுக்கான கவுன்சிலர் திருமதி.பானு பிரகாஷ் ஆகியோர் உயர் ஸ்தானிகருடன் இந்த சந்திப்பின்போது இணைந்திருந்தனர்.

கொவிட்19 நோய்க்கு பின்னரான காலப்பகுதியில் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தி ஆகிய விடயங்களும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

உட்பட அனைத்து இலங்கையர்களும் சமாதானத்தின் நலன்களை அனுபவிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் வீடமைப்பு திட்டம் போன்ற திட்டங்களால் சமூக உட்கட்டமைப்பு ஒன்றை உருவாக்குதலை நோக்கி நிலையான பங்களிப்பை இந்தியா வழங்கி வருவதை உயர் ஸ்தானிகர் எடுத்துரைத்தார். அத்துடன் தொடர்பாடல், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காகவும் இந்தியா தனது ஆதரவை தொடர்ந்து வழங்கும் என்றும் உயர்ஸ்தானிகர் இந்த சந்திப்பில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்திக்கான அபிலாஷைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த பல்வேறு நோக்குகள் தொடர்பாகவும் இரு தரப்பினரும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடினர். இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் ஆட்சியமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியான மாகாணசபை தேர்தல்கள் தொடர்பான தற்போதைய நிலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் உயர் ஸ்தானிகருக்கு தெரிவித்திருந்தனர்.

சமத்துவம், சமாதானம், நீதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு அமைவாகவும் வலுவான இலங்கையை உருவாக்கவும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல் என்ற அடிப்படையில் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள் அதிகாரங்களை பகிர்வதற்கான இந்தியாவின் ஆதரவையும் உயர் ஸ்தானிகர் இந்தச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்தியிருந்தார்.

Related posts