ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்கள்

திருச்சி காந்தி மார்க்கெட்டில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்கள் இன்று அழிக்கப்பட்டன.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் செயற்கை முறையில் மாம்பழங்களைப் பழுக்க வைப்பதற்காக ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முத்துராஜா, வசந்த், ஸ்டாலின், ரங்கநாதன், ஜஸ்டின், அன்புச்செல்வன், வடிவேலு, சண்முகசுந்தரம் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று திடீர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் காந்தி மார்க்கெட்டில் உள்ள 10 மாம்பழ குடோன்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் செயற்கை முறையில் மாம்பழங்களைப் பழுக்க வைக்க, ரசாயனங்கள் தெளிக்கப்பட்ட 4 டன் மாம்பழங்கள் கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள் திருச்சி அரியமங்கலத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி ஆய்வாளர் முன்னிலையில் பள்ளம் தோண்டப்பட்டு, அதில் கொட்டி மண் போட்டு மூடி, அழிக்கப்பட்டன.மேலும், உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயச் சட்டம் 2006-ன்படி மூன்று உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, உணவுப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ஆர். ரமேஷ்பாபு கூறுகையில், ”திருச்சி மாவட்டத்தில் மாம்பழங்கள் மற்றும் பழங்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்பவர்கள் செயற்கையாக அவற்றைப் பழுக்க வைக்க ரசாயனம் தெளிக்கக் கூடாது. அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் மீது உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் 2006-ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்று கலப்பட உணவுகள் தொடர்பாக பொதுமக்கள் 9585959595, 9944959595, 9444042322 என்ற செல்பேசி எண்களுக்குப் புகார் தெரிவிக்கலாம்” என்றார்

Related posts