ஊரடங்கு தளர்ந்த பின் தியேட்டர்கள் திறப்பது எப்போது?

கொரோனா முதல் அலை தாக்கியபோது, தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவுப்படி அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் 1,049 சினிமா தியேட்டர்கள் உள்ளன. கொரோனா முதல் அலை தாக்கியபோது, தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவுப்படி அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின், உயிர் பயம் காரணமாக தியேட்டர்களுக்கு கூட்டம் வரவில்லை. ஒரு காட்சிக்கு 10 அல்லது 15 பேர்கள் மட்டுமே வந்தார்கள்.இதனால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல், சில தியேட்டர்கள் மூடப்பட்டன.

சமீபத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கியதும், மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து சில புதிய படங்கள், ‘ஓடிடி’ தளத்தில் வெளிவந்தன.

இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு, உடனடியாக தியேட்டர்களை திறப்பது பற்றி திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த, ’ அஜித்குமார் நடித்த ‘வலிமை’ ஆகிய 2 பெரிய பட்ஜெட் படங்களும் தியேட்டர் அதிபர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. 2 படங்களுமே இப்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளன.

இந்த நிலையில், ‘‘தியேட்டர்களின் லைசென்சை புதுப்பிப்பது தொடர்பாக கடந்த ஆட்சியினரிடம் மனு கொடுத்தோம். இதுவரை லைசென்சு புதுப்பிக்கப்படவில்லை. புதிதாக பதவி ஏற்றுள்ள அரசு அதில் தலையிட்டு, உடனடியாக தியேட்டர்களின் லைசென்சை புதுப்பித்து தர வேண்டும்’’ என்று தியேட்டர் அதிபர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Related posts