தனுஷுடன் ஏற்பட்ட மோதல் குறித்து மனம் திறந்த சசிகாந்த்

‘ஜகமே தந்திரம்’ ஓடிடியில் வெளியாவது குறித்து, தனுஷ் உடன் ஏற்பட்ட மோதல் குறித்து முதன்முறையாகப் பேட்டியளித்துள்ளார் சசிகாந்த்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.ரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் திரையரங்க வெளியீடு அல்லாமல் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஜூன் 18-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஓடிடி வெளியீடு என்று முடிவானதிலிருந்தே தயாரிப்பாளர் சசிகாந்த் – தனுஷ் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.
‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஓடிடி வெளியீடு என்று முடிவான பிறகு, அந்தப் படம் தொடர்பாக எந்தவொரு ட்வீட்டையும் தனுஷ் வெளியிடாமலேயே இருந்தார். இதன் மூலம் சசிகாந்த் – தனுஷ் மோதல் வெளியே தெரியவந்தது.
தற்போது ‘ஜகமே தந்திரம்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் தயாரிப்பாளர் சசிகாந்திடம் தனுஷ் உடனான மோதல் குறித்துக் கேட்ட போது:
“கடந்த 4 மாதமாக இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது தொடர்பாக நான் எந்தவொரு கருத்தும் சொன்னதில்லை. நெகட்டிவ் பக்கம் இல்லாமல், நாம் தயாரித்துள்ள படம் உலக அளவில் போகப் போகிறது என்பதில் மட்டுமே இருக்கிறேன்.
ஒரு விஷயம் பலருக்கும் தெரியாது. நானும் தனுஷும் 10 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். இந்தப் பட விவகாரத்தில் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனுஷும் இந்தப் படத்தின் நல்லதுக்குதான் பேசினார். ‘ஜகமே தந்திரம்’ திரையரங்கில் வந்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்து ஒன்றும் தவறான கருத்தில்லையே. அவருடைய ரசிகர்கள் இந்தப் படத்தைத் திரையரங்கில் கொண்டாடுவார்கள். அது சரியான கருத்து தாஆனால், கமர்ஷியல் ரீதியாக ஒர் ஆண்டாக இவ்வளவு பெரிய பொருட்செலவு உள்ள படத்தை வைத்துக் கொண்டிருப்பது எவ்வளவு வட்டி என்பது எனக்குத் தான் தெரியும். இது தொடர்பாக நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன. இன்றைக்குக் கூட இந்தப் படத்தை வைத்திருந்தேன் என்றால், எப்போது இந்தப் படம் வெளியாகும். இப்போது கூட திரையரங்க வெளியீடு எப்போது என்பதற்குப் பதில் இல்லையே. படத்தின் நஷ்டம் என்பது வந்து கொண்டே இருக்கிறது. இதெல்லாம் நெகடிவ் பக்கம். இதை விட்டுவிடுங்கள்.
‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாசிடிவ் பக்கத்தைப் பாருங்கள். இந்தப் படம் சுமார் 200 மில்லியன் சந்தாதாரர்களைப் போய்ச் சேரப் போகிறது. உலக அளவில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் குறித்து அமெரிக்காவில் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக எனக்கு அது சந்தோஷத்தைத் தருகிறது”
இவ்வாறு தயாரிப்பாளர் சசிகாந்த் தெரிவித்தார்.

Related posts