இலங்கையில் மேலும் 42 மரணங்கள் பதிவு..

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 42 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (03) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 1,566 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 42 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 1,608 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த மரணங்கள் மே 02 – ஜூன் 03 வரை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மரணமடைந்த 42 பேரில், 25 பேர் ஆண்கள், 17 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

——-

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கும் நபர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் குணப்படுத்துவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் போலி டாக்டர் மற்றும் அவருக்கு உதவி வழங்கிய நபரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கெஸ்பேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹபொல பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்குச் சென்று, வைரஸ் தொற்றிலிருந்து அவர்களைக் குணப்படுத்துவதாக தெரிவித்து சிலர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக, கெஸ்பேவ பகுதியின் சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர், கெஸ்பேவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இவ்வாறு மோசடியில் ஈடுபட்ட போலி டாக்டர் ஒருவரையும் அவருக்கு உதவி வழங்கிய நபரையும் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் பயன்படுத்திய வேனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து பல வகையான மருந்துப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

சிகிச்சையளிப்பதற்காக சந்தேக நபர்கள் ஒருவரிடமிருந்து தலா 12,000 ரூபா வரை அறவிடுவதாக தெரிய வந்துள்ளது. இவர்கள் முகநூலில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணப்படுத்துவதற்கு தங்களால் முடியுமென்று பதிவேற்றியுள்ளதுடன், அதனூடாக தங்களை தொடர்பு கொள்ளும் நபர்களிடமே இவ்வாறு பண மோசடிகளை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கெஸ்பேவ பொலிஸார் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதுடன், அவர்களை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related posts