ஓடிடி வெளியீட்டுக்கு மறுப்பு தெரிவித்த மேஜர்

பெரும் விலை கொடுக்க முன்வந்தும், ஓடிடி வெளியீட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது ‘மேஜர்’ படக்குழு.
26/11 மும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர் கேரளாவைச் சேர்ந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன். இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘மேஜர்’ என்ற பயோபிக் திரைப்படம் உருவாகிறது. இந்தப் படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மகேஷ் பாபு தயாரித்து வருகிறார்.
சசி கிரண் டிக்கா இயக்கி வரும் இப்படத்தில் அடிவி சேஷ், சாய் மஞ்ச்ரேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜூலை 2-ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தப் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடப் பல்வேறு ஓடிடி தளங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. படத்தின் தயாரிப்புச் செலவை விடப் பெரும் விலை கொடுக்க முன்வந்த போதிலும், படக்குழுவினர் ஓடிடி வெளியீட்டுக்கு மறுத்துவிட்டனர்.
”மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணனை கவுரவிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடுவது சரியாக இருக்காது. திரையரங்கில் ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே படக்குழுவினர் கஷ்டப்பட்டுள்ளனர்” என்று கருதியதால்தான் ஓடிடி வெளியீட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது ‘மேஜர்’ படக்குழு.

Related posts